பொதுமக்களும், போலீஸும் ஒரே வாட்ஸ்-அப் குரூப்பில்; தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இப்படியொரு திட்டம்...
காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் மற்றும் காவலாளர்கள் இணைக்கப்பட்டு வாட்ஸ்-அப் குரூப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் மற்றும் காவலாளர்கள் இணைக்கப்பட்டு வாட்ஸ்-அப் குரூப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குற்றங்களைத் தடுக்கவும், பொதுமக்கள், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக காஞ்சிபுரத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒலிமுகமது பேட்டையில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமைத் தாங்கினார்.
இதில் அவர் பேசியது: "காஞ்சிபுரம் நகரில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்கவும், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும் பொதுமக்கள், காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இதற்காக தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக காஞ்சிபுரத்தில் ஆறு வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஒருவர் அடங்கிய வாட்ஸ்-அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படி, 21 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களும் காவல்துறையினருடன் வாட்ஸ்-அப் குழுவில் இணைக்கப்பட்டு இருப்பர்.
இந்தக் குழுவில், போக்குவரத்தைச் சீரமைத்தல், குற்றவாளிகளைப் பிடித்தல், சட்டவிரோதச் செயல்களை தடுத்தல் போன்றவற்றில் காவல்துறைக்கு பொதுமக்கள் உதவலாம். தங்களது குறைகள் மற்றும் பிரச்சனைகளை காவல் நிலையத்திற்குச் சென்று தயங்கும் பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே இந்த வாட்ஸ்-அப் குழு பாலமாக இருக்கும்.
காவலாளர்கள் குற்றங்களைக் கண்டுபிடிக்க சிரமப்படும்பொழுது, உளவுத் தகவல்களை காவலாளர்களுக்குத் தெரிவிக்கலாம். காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை பேணும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும்" என்று பேசினார்.
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் முதலானோர் பங்கேற்றனர்.