கோயம்புத்தூர்

வீட்டில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. 

இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபூங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும், அவற்றை கடைகளுக்கு விநியோகம் செய்கின்றனர் என்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை மற்றும் செல்வபுரம் காவலாளர்கள் கோயம்புத்தூர் காந்திபூங்கா அருகே உள்ள பொன்னையாராஜபுரம் கிருஷ்ணாநகரில் உள்ள ஒரு வீட்டுக்கு நேற்று சென்றனர். ஆனால், அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. 

அதிகாரிகள் அந்த வீட்டின் பூட்டை உடைத்து அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி வந்த தகவல் உண்மை என்பது உறுதியானது. புகையிலைப் பொருட்கள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள், "கோயம்புத்தூரில் தடைச் செய்யப்பட்டப் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த மாதம் 28-ஆம் தேதி கோயம்புத்தூர் தாமஸ் வீதியில் 1130 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது பொன்னையாராஜபுரம் பகுதியில் வீட்டில் பூட்டை உடைத்து சோதனை நடத்தி, 40 பெட்டிகளில் ஹான்ஸ், வி 1 புகையிலை மற்றும் 36 மூட்டைகளில் இருந்த குட்கா பாக்கெட்டுகள் உள்பட 1500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தோம். இவற்றின் மதிப்பு ரூ.17 இலட்சம் இருக்கும். 

இந்த வீட்டின் உரிமையாளர் யார்? என்று தெரியவில்லை. எனவே, அந்த வீட்டுக்கு சீல் வைத்து உள்ளோம். தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கூடாது. மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர்கள் எச்சரித்தனர்.