கோவை - சென்னை ரயில் சேவை திடீர் பாதிப்பு: மக்கள் அவதி
கோவை - சென்னை இடையேயான ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவையில் இருந்து சென்னை வரும் ரயில்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாவதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட தொலைதூர மாவட்டங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு பேருந்து, ரயில், விமானம் போன்ற போக்குவரத்து சேவைகள் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் கட்டணம் மற்றும் பயண வசதியை காரணம் காட்டி ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
ஆனால், ரயில் போக்குவரத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவே பயணிகள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் கோவையில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு புறப்பட்ட வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் மாலை 3.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைய வேண்டும். ஆனால் ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயில் சுமார் 2 மணி நேரமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே ஊழியர்கள் கூறுகையில் ஜோலார்பேட்டை முதல் சென்னை வரை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பயணிகள் முறையான முன்னறிவிப்பின்றி இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவதால் உரிய நேரத்தில் உரிய இடத்திற்கு சென்றடைய முடிவதில்லை.
தற்போது இதே ரயிலில் சென்னையில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகளும் உள்ளனர். அவர்கள் விமானத்தை தவறவிட்டால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இதுபோன்ற இடர்பாடுகளை தென்னக ரயில்வே உடனடியாக களைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.