பெண் ஓட்டுநராக இருக்கும் பேருந்தில் பயணிப்பது பெருமிதமாக உள்ளது - வானதி சீனிவாசன் பேட்டி
பெண் ஓட்டுநராக இருக்கும் பேருந்தில் பயணிப்பது பெருமிதமாக உள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
23 வயதான ஷர்மிளா பயணிகள் பேருந்தை திறம்பட ஒட்டி அசத்தி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பயணம் மேற்கொண்டார். பேருந்தில் பயணித்த வானதி சீனிவாசன் ஷர்மிளாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இது குறித்து பேட்டியளித்த பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற செய்தி வந்ததிலிருந்தே அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என எண்ணி இருந்த நிலையில் இன்று நேரம் கிடைத்தவுடன் அதே பேருந்தில் பயணித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாகவும், பேருந்தில் பயணம் செய்து நீண்ட காலம் ஆன நிலையில் தற்போது மீண்டும் பேருந்தில் செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். அதே சமயம் பெண் பேருந்து ஓட்டுநராக இருக்கும் பேருந்தில் பயணிப்பது மகளிர் அணி தலைவியாக பெருமிதமாக உள்ளது என்று கூறினார்.
மேலும் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதை கூற வேண்டும் என்பதுதான் தனது நோக்கமாக உள்ளது என தெரிவித்தார்.பின்னர் இது குறித்து பேசிய பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேருந்தில் வந்திருந்தது மிகுந்த ஆச்சரியம் அளித்ததாகவும் தன்னுடன் சிறிது நேரம் கலந்துரையாடி தனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகவும் தெரிவித்தார்.
ஓ இதுதான் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் சூட்சுமமா? இவர்தானா அது?