Coimbatore College: கோவையில் காதலை ஏற்க மறுத்ததால், கல்லூரி மாணவன் ஒருவன் சக மாணவியை கல்லூரி வளாகத்திலேயே கத்தியால் குத்தியுள்ளான். படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் KG தனியார் பொறியில் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 18 வயது மாணவன் ஹர்ஷவர்தன். இவர் தன்னுடன் படித்து வந்த மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவி தனது காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹர்ஷவர்தன் கல்லூரி வளாகத்தில் வைத்து மாணவியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

இதனையடுத்து கத்தியால் குத்திய மாணவன் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். பின்னர் அவரை கல்லூரி குழுமம் நடத்தி வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கல்லூரி வளாகத்திற்குள் நடந்த இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஹர்ஷவர்தன் மற்றும் மாணவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. கல்லூரியில் மற்ற மாணவர்களுடன் பேசக்கூடாது என்று ஹர்ஷவர்தன் மிரட்டியுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் அவர் மாணவியை கத்தியால் குத்தியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவி, ஹர்ஷவர்தன் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.