ஓ இதுதான் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் சூட்சுமமா? இவர்தானா அது?
தமிழத்தில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்வாக வேண்டும் என்ற அமித் ஷாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு டெல்லி சென்று விட்டார். முன்னதாக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அமித் ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், தமிழகத்தின் பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் சந்தித்தனர். அதன் தொடர்ச்சியாக, சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து 2 பிரதமர்களை கடந்த காலங்களில் தவறவிட்டுள்ளோம். அதற்கு காரணம் திமுகதான். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என பேசியதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, தமிழத்தில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்வாக வேண்டும் என்ற அமித் ஷாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி பிரதமராக வர வேண்டும் என அவரது தரப்பினர் கூறி வருகின்றனர், அண்ணாமலை பிரதமராக வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த தலைவர்களை இதுபோன்று கூறி வருகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், “தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதன் உள்நோக்கம் புரியவில்லை. வெளிப்படையாக இந்தக் கருத்தை அவர் கூறி இருந்தால் உரிய விளக்கம் அளிக்கப்படும். பிரதமர் மோடி மீது அமித் ஷாவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை. 2024ம் ஆண்டில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் உள்ளார்கள். ஒரு வேளை இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.
இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் பிரதமர் வேறு யாரும் இல்லை; பிரதமர் மோடிதான் அவர் எனவும் ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அமித் ஷா கூறியது பிரதமர் மோடியை மனதில் வைத்துகூட இருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதில் கிண்டலடிக்க எதுவும் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் இருந்து போட்டியிடப் போவதாக ஒரு தகவல் றெக்கை கட்டி பறந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அதேசமயம், மூன்றாவது முறையாக மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு பற்றி திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிகிறது. பெரிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய இரு இடங்களில் போட்டியிட்டு வாரணாசியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும். அதில் ஒன்று தமிழகத்தின் ராமநாதபுரம் என்றும் தகவல்கள் வெளியாகின. தமிழகத்தில் வலுவாகக் காலூன்ற பாஜக ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகிறது. எனவே, பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் கூடுதல் கவனம் பெற்று பாஜகவின் வளர்ச்சிக்கு உதவ வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டது.
இதற்கு ஏற்றாற்போல், பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் தமிழக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளோம் என பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறியிருந்தார். இந்த பின்னணியில், தமிழத்தில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்வாக வேண்டும் என அமித் ஷா கூறியது பிரதமர் மோடியாக இருக்குமோ? இதற்கு பின்னால் இதுபோன்று சூட்சுமம் கூட உள்ளதோ? என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, எதிர்காலத்தில் தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற அமித் ஷாவின் கருத்தை அண்ணாமலை மறுத்துள்ளார். “கட்சித் தொண்டர்களுடனான கூட்டத்தில் அமித ஷாவின் கூற்று ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் அவர்களுக்கான உரிமை இருக்கிறது. கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றே அமித் ஷா கூறினார். தொண்டர்களை ஊக்குவிக்கும் விதமாகவே அவர் பேசினார்.” என அண்ணாமலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.