பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இஸ்லாமாபாத் அணி 19.1 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிளாடியேட்டர்ஸ் அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஹஸ்னைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இஸ்லாமாபாத் அணியின் தொடக்க வீரர் காலின் முன்ரோ முதல் பந்திலேயே டக் அவுட்டானார். லூக் ராஞ்சி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாம் வரிசையில் ஆடிய டேவிட் மாலன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். ஒருமுனையில் மாலன் நிலைத்து ஆட, மறுமுனையில் ஹுசைன் டலட் மற்றும் காலின் இங்கிராம் ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஹுசைனை முகமது ஹஸ்னைனும் இங்ராமை பென் கட்டிங்கும் வீழ்த்தினர். 

40 பந்தில் 64 ரன்களை விளாசிய மாலனையும் பென் கட்டிங் வீழ்த்தினார். அதன்பின்னர் ஆசிஃப் அலி, ஃபஹீம் அஷ்ரஃப் மற்றும் முகமது மூசா ஆகிய மூவரையும் ஹஸ்னைன் வீழ்த்தினார். அந்த அணியின் கேப்டன் ஷதாப் கானை கட்டிங் 8 ரன்களில் வெளியேற்றினார். இதையடுத்து இஸ்லாமாபாத் அணி 19.1 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிளாடியேட்டர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஹஸ்னைன் 4 விக்கெட்டுகளையும் பென் கட்டிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

169 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கிளாடியேட்டர்ஸ் அணியின் ஆசாம் கான் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 33 பந்தில் அவர் 59 ரன்களை குவிக்க, கிளாடியேட்டர்ஸ் அணி 19வது ஓவரின் மூன்றாவது பந்திலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 

ஆட்டநாயகனாக கிளாடியேட்டர்ஸ் அணி சார்பில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய 19 வயது இளம் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஹஸ்னைன் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னர், கிளாடியேட்டர்ஸ் அணியில் ஆடும் ஷேன் வாட்சன், தான் வலைப்பயிற்சியில் எதிர்கொண்டதிலேயே ஹஸ்னைனின் பவுலிங்தான் மிகவும் கடினமானது என்று தெரிவித்திருந்தார். ஷேன் வாட்சன் சொன்னதற்கு தகுதியான வீரர் தான் என்பதை முதல் போட்டியிலேயே ஹஸ்னைன் நிரூபித்துள்ளார்.