ரசிகர்களுக்கு சிக்சருன்னு தெரியுது, நடுவருக்கு தெரியலயா? சாம்சன் அவுட் சர்ச்சை – டிரோல் செய்த நெட்டிசன்கள்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 56ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் சர்ச்சைக்குரிய ஆட்டமிழந்து வெளியேறியது தொடர்பாக நெட்டிசன்கள் நடுவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
ரசிகர்களுக்கு சிக்ஸருன்னு தெரிந்த விஷயம் கூட நடுவருக்கு தெரியல்லையா? என்று நெட்டிசன்கள் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். நேற்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 56ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது.
பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். எனினும், பராக் ஒரு பவுண்டரி 3 சிக்சர் உள்பட 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டி விளையாடி சாம்சன் கடைசியில் 46 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 86 ரன்கள் எடுத்து சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் அவுட்டில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
முகேஷ் குமார் ஓவரில் சாம்சன் பந்தை தூக்கி அடித்தார். அங்கு பவுண்டரி லைனில் நின்றிருந்த ஷாய் ஹோப் சர்ச்சையான முறையில் கேட்ச் பிடித்தார். கள நடுவரிடம் முறையிட்டும் பலனில்லாமல் கடைசியில் நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து ஷுபம் துபே 25 ரன்னிலும், டோனோவன் ஃபெரேரா 1 ரன்னிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசியில் ரோவ்மன் பவல் 13 ரன்களில் ஆட்டமிழக்கவே ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் கலீல் அகமது, முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அக்ஷர் படேல் மற்றும் ரசீக் தர் சலாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த நிலையில் தான் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர். நடுவரை விமர்சனம் செய்து எக்ஸ் பக்கங்களில் விமர்சனம் செய்துள்ளனர்.