திமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களை அழைத்து வரச்சொல்லி அதிமுக தலைமை மாவட்டச் செயலாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிரடியாக தயாராகி வருகிறது திமுக. ஹாட்ரிக் தோல்வியை தழுவிவிடக்கூடாது என மும்மரமாக பணியாற்றி வருகிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள். அதற்காக கட்சியில் களையெடுப்புகள் நடந்து வருகின்றன. தி.மு.க.,வில் சில மாவட்டச் செயலர்களின் பதவிகளை, அதிரடியாக பறித்து வருகிறார்கள். பதவி இழந்தவர்களும்,  அந்தப் பதவியை எதிர்பார்த்து கொக்குபோல் ஒற்றைக் காலில் குறிவைத்து காத்திருந்த பலரும், கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். 

இந்த தகவல் உளவுத்துறை மூலமாக அதிமுக அரசின் கவனத்துக்கு போய் இருக்கிறது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரப் போவதால், தி.மு.க.,வை பலவீனப்படுத்த, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆளுங்கட்சி அதிமுக முடிவு செய்து இருக்கிறது. இதனால், 'தி.மு.க., தலைமை மீது அதிருப்தியில் இருந்து வருபவர்களை அ.தி.மு.க., பக்கம் அழைத்து வாருங்கள்' என அந்தந்த மாவட்டச் செயலர்களுக்கு, ஓ.பி.எஸ்- எடப்பாடி இருவரும் உத்தரவு போட்டு இருக்கிறார்கள். இதனையடுத்து அதற்காக வேலைகளில் நிர்வாகிகள் இறங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.