உஷாராக இருங்க…பெட்ரோல் விலை  ரூ.80ஆக உயரப் போகுது…

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சாஎண்ணெய் விலை இனி அதிகரிக்க, அதிகரிக்க நம்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 80 ஆகவும், டீசல் 68 ஆகவும் உயரும் அபாயம் என ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் வெளிப்பாடாகத்தான் கடந்த 7 முறை பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஜனவரி மாதமும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.26 காசுகளும், டீசல் 97 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.  

 சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளான “ஓபேக்” அமைப்பு தனது பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கப் போவதாக சமீபத்தில் ஒப்பந்தம் செய்தது. அதன்பின், பீப்பாய் ஒன்றின் விலை 55 டாலர்கள்(ரூ.3,700) சுற்றியே இருக்கிறது.

 இந்நிலையில், ஒபேக் கூட்டமைப்பு, தனது உற்பத்தியை வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பீப்பாய்களாக குறைக்கப்போவதாக தெரிவித்து இருந்தது, நடைமுறைக்கு வந்துவிட்டது. இதனால் இனிவரும் காலங்களில் சர்வேதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் தேவை கடுமையாக அதிகரிக்கும். இந்த உற்பத்தி குறைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டதில் இருந்து சர்வதேச அளவில் ஏற்கனவே விலை 19 சதவீதம் அதிகரித்துவிட்டது. இனி வரும் மாதங்களில் கடுமையான விலை ஏற்றமும், தேவையும் அதிகரிக்கும்.

மேலும், பெட்ரோலிய கச்சாஎண்ணெய் உற்பத்திசெய்து ஏற்றுமதி செய்யும் ஒபேக் கூட்டமைப்பில் சேராத நாடுகள், அதாவது ரஷியா தலைமையிலா நாடுகளும் நாள்ஒன்றுக்கு 5.58 லட்சம் பீப்பாய்களை குறைக்க ஒப்புக்கொண்டு கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவு 3 டாலர் அளவு அதிகரித்துள்ளது.

இதனால், மேற்கத்திய நாடுகளில் கிடைக்கும் பிரென்ட் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்  ஒன்றுக்கு 50 டாலர்கள் முதல் 55 டாலர்களாக விலை உயரும். சில நேரங்களில் தேவையைப் பொறுத்து 60 டாலர்களாகவும் அதிகரிக்கும்.

இனி வரும் காலங்களில்  இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 80 ஆகவும், டீசல் ஒருலிட்டர் ரூ. 68 ஆகவும் விற்பனையாகும் சூழல் ஏற்படலாம். இதை கிரிசில் என்ற ஆய்வு நிறுவனமும் உறுதி செய்துள்ளது.  இது வரும் இந்த ஜனவரி மாதத்தில் இருந்தே பாதிப்புகள் தெரியவரும் இதன் காரணமாக பெட்ரோல் தற்போதுள்ள விலையில்  இருந்து 5 முதல் 8 சதவீதம் வரை 2017ம் ஆண்டு முதல் 6மாதத்துக்குள் விலை உயரக்கூடும். அதேபோல டீசல் தற்போதுள்ள விலையில் இருந்து, 6 முதல் 8சதவீதம் உயரக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இதனால், மும்பையில் பெட்ரோல் ரூ. 75 ஆகவும், டீசல் ரூ.64 ஆகவும் உயர வாய்ப்புள்ளது.