VVPAT CASE : 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி! உச்சநீதிமன்றம் அதிரடி
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தோடு பொருத்தப்பட்டுள்ள விவிபேட்டில் உள்ள சீட்டுக்களையும் எண்ணக்கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திர வழக்கு
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தற்போது உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகளை மாற்ற முடியும் என்றும், எனவே பழைய நடைமுறையான வாக்குச்சீட்டை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதே போல வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் விவிபேட்டில் விழும் ஒப்புகை சீட்டையும் முழுமையாக எண்ண உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் 3 அமைப்புகள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தது.
மனுக்கள் தள்ளுபடி
இந்த மனுக்கள் மீது கடந்த 10 நாட்களாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது கேரளாவில் வாக்குப்பதிவு இயந்திர சோதனையின் போது பாஜகவிற்கு ஒரு வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு கூடுதலாக வாக்கு விழுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என தெரிவித்தது. இந்தநிலையில் இன்று மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இரண்டு நீதிபதிகள் விவபேட் முறைக்கு ஆதரவாகவும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கியுள்ளனர். மேலும் பழைய முறைப்படி வாக்குச்சீட்டை பயன்படுத்த உத்தரவிடமுடியாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்தல் ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது சந்தேகத்திற்கு வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பதிவேற்றம் செயல்முறை முடிந்ததும், அதன் அலகு சீல் செய்யப்பட்டு அதற்கான அமைப்புகளில் பாதுகாக்கப்பட வேண்டும். இது வாக்கு இயந்திரங்கள் வைக்கும் ஸ்ட்ராங் ரூமிலேயே சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்களுக்கு EVMகளுடன் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட வேண்டும். மேலும் வாக்கு பதிவில் குளறுபடி என சொல்லி யாரவது அதை சரி பார்க்க விண்ணப்பதால் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்., EVM தவறாகக் செயல்பட்டது கண்டறியப்பட்டால், கட்டணம் திருப்பித் தரப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.