சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை வழிமறித்து சில வாலிபர்கள், பாலியல் தொல்லை கொடுத்தனர். இச்சம்பவம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்துள்ளது. இந்த காட்சி அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி வைரலாக வலைதளங்களில் பரவி வருகிறது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அங்கிருந்த பெண்களுக்கு, சில வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தனர். போலீசார் கண் முன்னே இச்சம்பவம் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த பிரச்சைனைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்காக சம்பவ இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கின்றனர்.

இந்நிலையில், சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை வழிமறித்து, வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் காட்சி, இணையதளங்களில் பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவின் கம்மானாஹாலி பகுதியில் தெருமுனையில் ஆட்டோவில் இருந்து இறங்கி, சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்ற இளம்பெண்ணை, அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள், வழி மறிக்கின்றனர். பின்னர், அவரை வலுக்கட்டாயமாக சாலையோரத்தில் இழுத்து செல்கின்றனர். இதையடுத்து, அவரை பயங்கரமாக கீழே தள்ளிவிட்டு பைக்கில் வேகமாக செல்கின்றனர்.

அந்த நேரத்தில் அந்த தெருமுனையில் சிலர் இந்த காட்சியை வேடிக்கை பார்க்கின்றனர். ஆனால், யாரும் தடுக்கவோ, அவர்களை பிடிக்கவோ செய்யவில்லை.

இந்த காட்சி அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பெரும் கேள்வியை எழுப்பி உள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு அன்று அதிகாலை 2.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.

இந்த வீடியோ காட்சிகளை பார்த்த அந்த வீட்டின் உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிக மக்கள் வசிக்கும் பகுதியில், நடந்து செல்ல ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லாதபோது, மற்ற பகுதிகளில் பாதுகாப்பு என்பது எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினர்.