Back Pain: பைக்குகளில், பஸ்களில் பயணம் செய்யும்போது சிலருக்கு முதுகுவலி வந்து விடுகிறது. முதுகு வலியை தடுப்பது எப்படி? என இந்த செய்தியில் விரிவாக‌ பார்ப்போம்.

வேலை, படிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக தினமும் பல மணி நேரம் பயணம் செய்வது, நம்மில் பலரின் அன்றாடப் போராட்டமாக இருக்கிறது. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் பைக், கார், பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கும்போது, முதுகு மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் வலி என்பது பொதுவான புகாராகிவிட்டது. ஆனால், இந்த வலிகளுக்குக் காரணம் நீண்ட நேரப் பயணம் மட்டுமல்ல, அப்போது நாம் செய்யும் சில கவனக்குறைவான தவறுகளும்தான்.

முதுகுவலிக்கான 5 காரணங்கள்

சரியான முறையில் அமராமல் இருப்பது, அதிகப்படியான சுமைகளைச் சுமப்பது போன்றவை நமது முதுகுத்தண்டில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. நாளடைவில் இது தீவிரமான உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். பயணத்தின்போது நாம் தவிர்க்க வேண்டிய சில முக்கிய பழக்கவழக்கங்கள் இங்கே.

பயணங்களில் நாம் செய்யும் பொதுவான தவறுகள்

முதலில், அதிக எடை கொண்ட பைகளைத் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும். லேப்டாப், புத்தகங்கள் என அனைத்தையும் ஒரே பையில் போட்டு, அதை ஒரு தோளில் மட்டும் மாட்டிக்கொண்டு நடப்பது உடலின் சமநிலையைப் பாதிக்கும். இது கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுப் பகுதிகளில் தசைப் பிடிப்பை உண்டாக்கும். முடிந்தவரை, இரண்டு தோள்களிலும் எடையைச் சமமாகப் பகிரும் பேக்குகளைப் பயன்படுத்துவது நல்லது.

இதையும் படிங்க: Kidney Health: சாப்பாட்டில் உப்பு அதிகமா? சைலண்ட்டாக பாழாகும் கிட்னி.. நிபுணர்கள் எச்சரிக்கை

வாகனங்களில் நாம் அமரும் விதம்

அடுத்ததாக, வாகனங்களில் நாம் அமரும் விதம். மணிக்கணக்கில் பைக் அல்லது ஸ்கூட்டர் ஓட்டும்போது, சாலைகளில் உள்ள பள்ளம், மேடுகளால் ஏற்படும் அதிர்வுகள் நேரடியாகக் கீழ் முதுகைப் பாதிக்கும். அதேபோல, காரில் பயணிக்கும்போது, சீட்டில் சாய்ந்து அமர்வது அல்லது முன்பக்கமாகக் குனிந்து அமர்வது கழுத்து மற்றும் முதுகுத் தசைகளில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். இதுவே பலரின் முதுகுவலிக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் சவால்களும் இருக்கின்றன. பேருந்துகளின் கடைசி வரிசை இருக்கைகளில் அமரும்போது, சாலையின் அதிர்வுகள் அதிகமாக உணரப்படும், இது கீழ் முதுகில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதேபோல, கூட்ட நெரிசல் மிகுந்த ரயில்களில் நீண்ட நேரம் நின்றுகொண்டே பயணம் செய்வதும் கால்கள் மற்றும் முதுகில் சோர்வை உண்டாக்கும்.

வலியில்லாத பயணத்திற்கு என்ன வழி?

பயணத்தின்போது நாம் செய்யும் மற்றொரு பெரிய தவறு, மணிக்கணக்கில் தலையைக் குனிந்தபடி செல்போனைப் பயன்படுத்துவது. இது கழுத்துத் தசைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, கழுத்து வலி மற்றும் தலைவலியைத் தூண்டும். போனை கண் மட்டத்திற்கு அருகில் வைத்துப் பயன்படுத்துவதும், இடையிடையே ஓய்வு கொடுப்பதும் அவசியம்.

இதையும் படிங்க: காதல் திருமணங்களுக்கு தடை விதித்த கிராமம்! பஞ்சாயத்து முடிவுக்கு கிளம்பும் எதிர்ப்பு.. எந்த ஊர்ல தெரியுமா?

இப்படி செய்தால் வலிகளை குறைக்கலாம்

எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும், நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது வாகனத்தை விட்டு இறங்கி சிறிது தூரம் நடப்பது, உடலை நீட்டி ஆசுவாசப்படுத்திக்கொள்வது தசை இறுக்கத்தைக் குறைக்கும். பயணத்தை நம்மால் தவிர்க்க முடியாது, ஆனால் பயணிக்கும் முறையில் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், தேவையற்ற வலிகளை நிச்சயம் தவிர்க்கலாம்.

இந்த எளிய மாற்றங்களுக்குப் பிறகும் முதுகு அல்லது கழுத்து வலி தொடர்ந்தால், அல்லது கை, கால்களில் உணர்வின்மை, பலவீனம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.