- Home
- இந்தியா
- காதல் திருமணங்களுக்கு தடை விதித்த கிராமம்! பஞ்சாயத்து முடிவுக்கு கிளம்பும் எதிர்ப்பு.. எந்த ஊர்ல தெரியுமா?
காதல் திருமணங்களுக்கு தடை விதித்த கிராமம்! பஞ்சாயத்து முடிவுக்கு கிளம்பும் எதிர்ப்பு.. எந்த ஊர்ல தெரியுமா?
Love Marriages: இந்தியாவில் ஒரு கிராம பஞ்சாயத்தில் காதல் திருமணங்களுக்கும், லிவ்-இன் உறவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்தின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காதல் திருமணங்களுக்கு அதிரடி தடை
ஹரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டத்தில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்திருக்கிறது. இங்குள்ள நௌகாமா காப் பஞ்சாயத்து, வரலாற்றிலேயே முதல் முறையாக பெண்கள் தலைமையில் ஒரு மகாபஞ்சாயத்தை நடத்தியுள்ளது. ராம்ராய் கிராமத்தில் நடந்த இந்த கூட்டத்தில், காதல் திருமணம், லிவ்-இன் உறவுகள் மற்றும் வரதட்சணை முறைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு, காப் பஞ்சாயத்தின் அதிகார வரம்புக்குள் வரும் 21 கிராமங்களுக்கும் பொருந்தும்.
இந்த மகாபஞ்சாயத்தை முழுக்க முழுக்க பெண்கள்தான் முன்னின்று நடத்தினார்கள் என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம். ஆண்கள் அனைவரும் பின்னால் அமர்ந்து கூட்டத்தை கவனித்தனர். திருமணம் தொடர்பான பழக்கவழக்கங்கள், வரதட்சணை, துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் ஆபாசமான விஷயங்கள் என பல சமூகப் பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
லிவ்-இன் உறவுகளும் கூடாது
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி, நௌகாமா காப் கட்டுப்பாட்டில் உள்ள 21 கிராமங்களில் காதல் திருமணமோ, லிவ்-இன் உறவுகளோ, வரதட்சணையோ ஏற்றுக்கொள்ளப்படாது. அதுமட்டுமல்லாமல், 'கன் கல்ச்சர்' எனப்படும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கும், ஆபாசமான விஷயங்களுக்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆதரவைத் திரட்டவும் 21 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு உறுப்பினர்கள், காப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள குடும்பங்களிடமும் மக்களிடமும் பேசி, இந்தத் தீர்மானங்களை விளக்கி ஆதரவு கேட்பார்கள்.
பஞ்சாயத்து முடிவுக்கு கடும் எதிர்ப்பு
ஹரியானாவின் நௌகாமா காப் பஞ்சாயத்தில் பெண்கள் முன்னின்று இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பது ஒருபுறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், காதல் திருமணத்துக்கு, லிவ் இன் உறவுகளுக்கு தடை விதித்து இருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான 'தனிநபர் சுதந்திரம்' மற்றும் 'விருப்பமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை' ஆகியவற்றிற்கு எதிராக இந்த கட்டுப்பாடுகள் அமைந்திருப்பதாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, காதல் திருமணம் மற்றும் லிவ்-இன் உறவுகளுக்கு தடை விதிப்பது சட்டப்பூர்வமானது அல்ல என்றும், காப் பஞ்சாயத்துகள் எடுக்கும் இதுபோன்ற சமூக முடிவுகள் தனிநபர்களின் சுதந்திரத்தை முடக்கும் செயல் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெண்களே இப்படி தீர்ப்பு அளிக்கலாமா?
அதுவும் பெண்கள் நடத்திய இந்த பஞ்சாயத்தில் பழங்காலம் போன்று இதுபோன்ற தடைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது, பாரம்பரிய சமூகக் கட்டுப்பாடுகளையும் பிற்போக்கு எண்ணங்களையுமே மீண்டும் நிலைநிறுத்த வழிவகுக்கும் என்று பல்வேறு தரப்பினரும் தங்களின் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இருப்பினும், இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் அந்த காப் பஞ்சாயத்தின் சமூக முடிவுகளே. இந்தியா முழுவதும் பொருந்தும் சட்டங்களையோ அல்லது அரசியலமைப்புச் சட்ட உரிமைகளையோ இது மாற்றி அமைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

