பழங்களின் ராஜா என்றும், முக்கனிகளில் முதல் கனி என்றும் புகழப்படும் மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவதுடன், கொஞ்சம் வித்தியாசமாக கேரளத்து ஸ்டையிலில் 3 விதமான டிஷ்களை இந்த ஆண்டு மாம்பழ சீசன் முடிவதற்கு செய்து பாருங்கள். சுவையில் உங்களையே மறந்துடுவீங்க.
மாம்பழத்தின் பல வகைகளை இந்தியாவில் காணலாம், குறிப்பாக தமிழ்நாட்டில் பங்கனப்பள்ளி, அல்போன்சா, நீலம், ருமானி, கல்லாமை (கிளி மூக்கு) மற்றும் மல்கோவா போன்ற வகைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மாம்பழங்கள் உடலுக்கு வெப்பத்தைத் தரும் என்பதால், மாம்பழம் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் பால் குடிப்பது நல்லது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
மாம்பழ சீசனை மேலும் சிறப்பாக்க, நீங்கள் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய 3 மாம்பழ சமையல் குறிப்புகளை இங்கே காணலாம். இவை மாம்பழத்தின் சுவையையும், தனித்துவத்தையும் முழுமையாக வெளிப்படுத்தும்.
மாம்பழ புலாவ் :
மாம்பழத்தை சாதத்துடன் சேர்த்து செய்வது ஒரு புதுமையான அனுபவத்தை தரும். இனிப்பு, புளிப்பு மற்றும் நறுமணமிக்க மசாலாப் பொருட்களின் கலவை இந்த புலாவ்வை தனித்துவமாக்கும்.
தேவையான பொருட்கள்:
சமைத்தது பாஸ்மதி அரிசி - 1 கப்
மாம்பழம் - 1
வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
முந்திரி பருப்பு - 10-12
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நெய்/எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும் அதில் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், பிறகு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மாம்பழத் துண்டுகள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் சமைத்த சாதத்தை சேர்த்து, மாம்பழத் துண்டுகள் உடையாமல் கவனமாக கிளறவும். கடைசியாக வறுத்த முந்திரியை சேர்த்து, கொத்தமல்லி இலைகளை தூவி, அடுப்பை அணைத்து சூடாகப் பரிமாறவும்.
மாம்பழ கேசரி :

மாம்பழ கேசரி என்பது ரவை கேசரியின் மாம்பழ சுவை கொண்ட ஒரு மாறுபாடு. இது ஒரு பாரம்பரிய தென்னிந்திய இனிப்பு, இது மாம்பழ சீசனில் வீட்டில் தயாரிக்கப்படும் ஒரு சிறப்பு இனிப்பு.
தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கப்
நெய் - 1/4 கப்
மாம்பழ ப்யூரி - 1 கப் (பழுத்த மாம்பழத்தை அரைத்தது)
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1.5 கப்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 10-12
உலர் திராட்சை - 10-12
செய்முறை:
ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் ரவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுக்கவும். பிறகு கடாயில் தண்ணீர் மற்றும் மாம்பழ ப்யூரி சேர்த்து கொதிக்க விடவும், தண்ணீர் கொதித்ததும், வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் வராதபடி கிளறவும், ரவை கெட்டியானதும், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை கரைந்து கேசரி கெட்டியானதும், மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். கடைசியாக வறுத்த முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை அணைத்து சூடாக அல்லது அறை வெப்பநிலையில் பரிமாறவும்.
மாம்பழ புட்டிங் :
மாம்பழ புட்டிங் என்பது ஒரு எளிமையான, ஆனால் மிகவும் சுவையான இனிப்பு வகையாகும். மாம்பழ சீசனில் வீட்டில் விருந்தினர்கள் வரும்போது இதை எளிதாக தயார் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மாம்பழ ப்யூரி - 2 கப் (பழுத்த மாம்பழத்தை தோல் நீக்கி அரைத்தது)
கண்டன்ஸ்ட் மில்க் - 1 கப்
விப்பிங் கிரீம் (Whipped Cream) - 2 கப்
செய்முறை:
ஒரு பெரிய கிண்ணத்தில் விப்பிங் கிரீமை நன்கு நுரைக்கும் வரை அடிக்கவும். மாம்பழ ப்யூரி மற்றும் கண்டன்ஸ்ட் மில்க்கை விப்பிங் கிரீமுடன் மெதுவாக சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இந்த கலவையை சிறிய கப்கள் அல்லது ஒரு பெரிய புட்டிங் மோல்டில் ஊற்றி, குறைந்தது 3-4 மணிநேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். பரிமாறும் போது மேலே நறுக்கிய மாம்பழத் துண்டுகள் அல்லது புதினா இலைகளை கொண்டு அலங்கரித்தி பரிமாறலாம்.
