ஆந்திராவின் பிரபலமான உணவுகளில் ஒன்று கோங்குரா. பலவகையான சைவ மற்றும் அசைவ உணவுகள் இதை பயன்படுத்தி செய்வது உண்டு. கோங்குராவை வைத்து சிக்கன் எப்படி செய்வது, வித்தியாசமான சுவையை எப்படி கொண்டு வந்த அசத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கோங்குரா சிக்கன், புளிப்பு சுவையும் காரமும் நிறைந்த ஒரு அசத்தலான உணவு. தமிழகத்தில் 'புளிச்ச கீரை' என்று அழைக்கப்படும் கோங்குரா இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கோழி குழம்பு, சாதம், ரொட்டி, பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கோங்குரா இலைகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

கோங்குரா சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

கோழி கறி - 750 கிராம்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

நறுக்கிய வெங்காயம் - 1

நறுக்கிய பச்சை மிளகாய் - 5

நறுக்கிய கொத்தமல்லி - 1/2 கட்டு

நறுக்கிய புதினா இலைகள் - 1/2 கட்டு

தயிர் - 1 கப்

நெய் - 1 தேக்கரண்டி (விரும்பினால்)

கோங்குரா விழுதிற்கு:

கோங்குரா இலைகள் (புளிச்ச கீரை) - 2 பெரிய கட்டு

பச்சை மிளகாய் - 10

கொத்தமல்லி - 1/2 கட்டு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 தேக்கரண்டி

தாளிக்க மற்றும் குழம்புக்கு:

எண்ணெய் - 3-4 தேக்கரண்டி

வெங்காயம் - 2 பெரியது

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 4-5

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

தக்காளி - 1

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தம் செய்த எலும்புடன் கூடிய கோழித் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சை சாறு, கரம் மசாலா, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா இலைகள் மற்றும் தயிர் அனைத்துப் பொருட்களையும் கோழியுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி, குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.

கோங்குரா விழுது தயாரித்தல்:

கோங்குரா இலைகளில் (புளிச்ச கீரை) தண்டுகளை நீக்கி வெறும் இலைகளை மட்டும் தனியே எடுத்து

தண்ணீரில் அலசி வடிகட்டி எடுக்கவும். ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, சூடானதும் கோங்குரா இலைகள், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். இலைகள் சுருங்கி மென்மையாகும் வரை வதக்கவும், வதக்கிய இலைகளை ஆறவிட்டு, ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும். .

கோங்குரா சிக்கன் குழம்பு சமைத்தல்:

ஒரு கடாய் அல்லது பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு மற்றும் சீரகம் சேர்த்து வெடிக்க விடவும். பின்பு காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் மஞ்சள் தூள், தனியா தூள், சீரகத் தூள், மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது ஊறவைத்த கோழித் துண்டுகளைச் சேர்த்து, கடாயை மூடி, 10-15 நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும். இடையில் கிளறி விடவும்.

எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்ததும், அரைத்து வைத்துள்ள கோங்குரா விழுதைச் சேர்த்து தேவைப்பட்டால் 1/2 கப் முதல் 1 கப் வரை தண்ணீர் சேர்த்து பின்பு கடாயை மூடி, கோழி முழுமையாக வெந்து, குழம்பு கெட்டியாகி, சுவை நன்கு கலக்கும் வரை 10-15 நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும். இப்போது குழம்பின் உப்பு, காரம் மற்றும் புளிப்பை சரிபார்த்து கடைசியாக, புதிதாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பை அணைக்கவும்.

பரிமாறும் முறை:

சுவையான கோங்குரா சிக்கன் குழம்பை சூடான சாதம், நெய் சாதம், சப்பாத்தி, நாண், தோசை அல்லது பரோட்டாவுடன் சேர்த்து பரிமாறவும்.