sinus remedy : சைனஸ் பிரச்சனையால் அவதியா? இந்த ஒரு இலை போதும்.! நிரந்தர தீர்வு பெறலாம்
சைனஸ், ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இயற்கை அளித்த வரப் பிரசாதம் தான் நொச்சி இலை. இந்த இலையின் பயன்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Nochi Leaf Sinus Remedy in Tamil
இந்தியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு மூலிகை செடி வகை தான் நொச்சி இலை. இதன் பூக்கள், இலைகள், காய்கள், பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேதம், சித்தா, யுனானி போன்ற மருத்துவ முறைகளில் இந்த இலை முக்கிய பங்கு வகிக்கிறது. இது கிருமிநாசினி, வலி நிவாரணி, பூச்சிவிரட்டி, அலர்ஜி எதிர்ப்பு ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக தலைவலி, சைனஸ் பிரச்சனை, தலைபாரம் ஆகியவற்றிற்கு இந்த இலை அருமருந்தாக செயல்படுகிறது. இந்த இலையின் பயன்கள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் மைதிலி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நொச்சி இலை கொண்டு நீராவி பிடித்தல்
அதில் அவர் சைனஸ், தலைவலி பிரச்சனையை போக்குவதற்கு நொச்சி இலைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று விளக்கமளித்துள்ளார். அதில் முதல் முறையாக நீராவி பிடித்தலை அவர் கூறியுள்ளார். ஒரு கைப்பிடி நொச்சி இலைகளை எடுத்து, அதை நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு போர்வையால் நம்மை மூடிக்கொண்டு அந்த தண்ணீரில் நீராவி பிடிக்க வேண்டும். 30 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை தொடர்ந்து செய்து வந்தால் தலைவலி மற்றும் தலைபாரம் குறையும். நீராவி பிடிக்க இயலாதவர்கள் ஒரு மெல்லிய துணியில் ஒரு கைப்பிடி நொச்சி இலைகளை வைத்து கட்டி தலையணைக்கு அடியில் வைத்து பயன்படுத்தலாம்.
நொச்சி இலை கொண்டு பற்றிடுதல்
தலையணையில் உள்ளே இருக்கும் பஞ்சுகளை எடுத்து விட்டு அதற்கு பதிலாக நொச்சி இலைகளை நிரப்பி அதில் படுத்து உறங்கலாம். இந்த இலை தலையில் தேங்கி இருக்கும் தேவையற்ற நீரை வெளியேற்றி தலை பாரத்தை குறைக்க உதவும். இதிலிருந்து வெளிவரும் வாசம் மூக்கடைப்பு, சளி பிரச்சனைகளையும் சரி செய்ய உதவும். சைனஸ் காரணமாக கடுமையான தலைவலி அல்லது வீக்கம் இருப்பவர்கள் நொச்சி இலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை சுக்குத்தூள் சேர்த்து நன்றாக கலந்து நெற்றியின் இருபுறமும் பற்று போல தடவ வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்து வருவதன் மூலம் வீக்கம் வெகுவாக குறையும். பற்று காய்ந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி விட வேண்டும்.
நொச்சி இலையை வைத்து ஒத்தடம் கொடுக்கும் முறை
கன்னம், தலை, கழுத்துப் பகுதிகளில் சைனஸ் மற்றும் சளி பிரச்சனை காரணமாக வீக்கம் இருப்பவர்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் முறை சிறந்த தீர்வை தரும். ஒரு கைப்பிடி நொச்சி இலைகளை இரண்டு டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து இரும்பு கடாயில் நன்கு வதக்க வேண்டும். வதங்கிய இலைகள் வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது அதை ஒரு சுத்தமான பருத்தித் துணியில் கட்டி வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் வலி குறைவதுடன் தலைவலி, பாரம், சைனஸ் பிரச்சனைகளும் குறையும். நொச்சி இலைகள் பொதுவாக வீட்டிற்கு அருகில் புதர்களில் யாரும் கவனிப்பாற்று கிடக்கும் ஒரு செடியாகும். ஆனால் இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
நொச்சி இலையில் இருக்கும் மருத்துவ குணங்கள்
நொச்சி இலைகளில் காணப்படும் சேர்மங்கள் வலி நிவாரணியாகவும், அலர்ஜி எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது. தசைவலி, முதுகு வலி, கழுத்து வலி போன்ற வலிகளுக்கும், வீக்கங்களுக்கும் நொச்சி இலை சிறந்த தீர்வைத் தருகிறது. நொச்சி இலை நீராவி பிடித்தல் மூலமாக மூச்சுக்குழாய் அலர்ஜி, ஆஸ்துமா, சளி, இருமல், ஒற்றை தலைவலி ஆகியவற்றிற்கு நிவாரணம் கிடைக்கிறது. மேலும் இந்த இலைகள் கபம் அகற்றும் பண்புகளைக் கொண்டுள்ளதால் மூச்சுக்குழாய்களில் தேங்கியிருக்கும் சளிகளை தளர்ச்சி செய்து வெளியேற்ற உதவுகின்றன. நொச்சி இலைகளுக்கு உடலின் வெப்பநிலையை குறைக்கும் தன்மையும் உண்டு. இந்த இலைகளில் கிருமி நாசினி, பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு ஆகிய பண்புகள் இருப்பதால் காயங்கள், புண்கள், தோல் அலர்ஜி, சிரங்கு, படர்தாமரை போன்ற தோல் நோய்களுக்கும் பயன்படுத்தலாம்.
இயற்கை கொசுவிரட்டி
இதில் இருக்கும் கசப்பு மற்றும் காரமான வாசம் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டது. நொச்சி இலைகளை வீட்டைச் சுற்றி வைக்கலாம் அல்லது காய்ந்த நொச்சி இலைகளை சாம்பிராணி போல புகை போடுவதன் மூலமாகவோ கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இது இயற்கையான பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது. மேலும் இந்த இலைகளுக்கு மனதை அமைதிப்படுத்தும் மற்றும் பதட்டத்தை குறைக்கும் பண்புகள் இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் நொச்சி இலை கொண்டு நீராவி பிடித்தல் அல்லது தலையணைக்கு அடியில் வைத்து தூங்குதல் ஆகியவற்றின் மூலமாக தீர்வு பெறலாம்.
மருத்துவ ஆலோசனைக்குப் பின் எடுப்பது நல்லது
நொச்சி இலைகள் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும் எந்த ஒரு மூலிகையை பயன்படுத்தும் முன்னர் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் நாள்பட்ட நோய் உள்ளவர்கள் சித்த அல்லது ஆயுர்வேத நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். மேலும் சரியான அளவும் ,முறையான வழிகாட்டுதலுடனும் பயன்படுத்தினால் மட்டுமே மூலிகைகள் சிறந்த பலன்களைத் தரும். எனவே நொச்சி இலைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.