டேஸ்டா, நிறைய சாப்பிடணும்...ஆனா வெயிட் ஏற கூடாது...அப்டின்னா இதை டிரை பண்ணுங்க
நாக்கிற்கு சுவையாக, வயிறு நிறைய சாப்பிட வேண்டும். ஆனாலும் உடல் எடை ஏறாமல் சரியான அளவில் இருக்க வேண்டும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், உடலுக்கு தேவையான சத்துக்களுக்கு கிடைக்கணும்னு நினைக்கிறீர்கள் என்றால் இந்த உணவை டிரை பண்ணி பாருங்க.

பச்சை பயறு டோஸ்ட் என்றால் என்ன?
பச்சை பயறு டோஸ்ட் என்பது வேகவைத்த அல்லது முளைகட்டிய பயறுகளை ( பாசிப்பயறு ) மசித்து, அதனுடன் காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்த்து, ரொட்டி துண்டுகளின் மேல் தடவி சுடப்படும் ஒரு உணவு வகையாகும். இது ஒரு சத்தான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு அல்லது மாலை நேர சிற்றுண்டியாகும். பயறுகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.
பச்சைப் பயறு டோஸ்ட் ஏன் எடை குறைப்பிற்கு சிறந்தது?
பாசிப் பயறுகளில் அதிக அளவு புரதம் உள்ளதால் பசியைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக உணர வைக்கும். மேலுன் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது, இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது மற்றும் நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்கிறது.
மற்ற டோஸ்ட் வகைகளுடன் ஒப்பிடும்போது பச்சை பயறு டோஸ்டில் கலோரிகள் குறைவாக இருக்கும். குறிப்பாக எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தி, நிறைய காய்கறிகளைச் சேர்த்தால், இது மிகவும் குறைவான கலோரி கொண்ட உணவாக மாறும்.
பச்சைப் பயறு டோஸ்டில் புரதம், நார்ச்சத்து மட்டுமல்லாமல், இரும்பு, மெக்னீசியம், ஃபோலேட் போன்ற அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை எடை குறைக்கும் போது, உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்க உதவுகின்றன.
பச்சைப் பயறு டோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள் :
பாசிப்பயறு : 1 கப்
ரொட்டி துண்டுகள்: 4-6
வெங்காயம்: 1 சிறியது
கேர்ட் : சிறிதளவு நறுக்கியது
பச்சை மிளகாய்: 1-2
இஞ்சி பூண்டு விழுது: 1/2 தேக்கரண்டி
மல்லித்தழை: சிறிதளவு
மஞ்சள் தூள்: 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்: 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா: 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள்: 1/4 தேக்கரண்டி
உப்பு: தேவையான அளவு
எண்ணெய்/நெய்: டோஸ்ட் சுடுவதற்கு சிறிதளவு
பயறு டோஸ்ட் செய்முறை :
பாசிப் பயறுகளை நன்கு கழுவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2-3 விசில் வரும் வரை வேகவிடவும், வேகவைத்த பயறுகளை தண்ணீர் இல்லாமல் நன்கு மசித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மசித்த பயறுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கேரட், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மல்லித்தழை மற்றும் மேற்கூறிய அனைத்து மசாலாப் பொருட்களையும் மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
ரொட்டி துண்டுகளில் ஒருபுறம் சிறிதளவு எண்ணெய்/நெய் தடவி, அதன் மேல் பயறு கலவையைச் சமமாகப் பரப்பவும். ஒரு தோசைக்கல்லை சூடாக்கி, மிதமான தீயில், பயறு தடவிய பக்கத்தை முதலில் வைத்து, பொன்னிறமாக மாறும் வரை சுடவும். பிறகு மறுபக்கத்தையும் லேசாக எண்ணெய்/நெய் தடவி பொன்னிறமாக சுட்டு எடுத்தால், சுவையான பச்சை பயிறு டோஸ்ட் தயார்.
ஆரோக்கியமாக மாற்றும் குறிப்புகள் :
முளைகட்டிய பயறுகளைப் பயன்படுத்துவது அவற்றின் சத்து மதிப்பை மேலும் அதிகரிக்கும். சாதாரண ரொட்டிக்கு பதிலாக முழு தானிய ரொட்டியைப் பயன்படுத்துவது நார்ச்சத்து மற்றும் சத்துக்களை அதிகரிக்கும். டோஸ்ட்டை சுடும்போது குறைந்த அளவு எண்ணெய் அல்லது நெய்யைப் பயன்படுத்தவும். ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இந்த டோஸ்ட்டுடன் காரமான புதினா அல்லது கொத்தமல்லி சட்னி அல்லது ஒரு கப் தயிருடன் பயறு டோஸ்டை சேர்த்து சாப்பிட்டால், புரதம் மற்றும் கால்சியம் சத்து மேலும் கிடைக்கும்.
ஆரோக்கிய நன்மைகள் :
எடை குறைப்பிற்கு உதவுவதைத் தவிர, பயறு டோஸ்ட் வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது: பயறுகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவை கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன.
பயறுகளில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது, இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. புரதம் மற்றும் சிக்கலான கார்போஹைடிரேட்கள் நிறைந்த பயறுகள் நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
இந்த பயறு டோஸ்ட் ரெசிபி, நீங்கள் நிறைய சாப்பிட விரும்பினாலும், உங்கள் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகும். இது சுவையானதும், ஆரோக்கியமானதும் மட்டுமல்லாமல், தயாரிப்பதற்கும் எளிமையானது. உங்கள் அடுத்த உணவிற்கு இதை முயற்சி செய்து பாருங்கள்.