பத்ம விபூஷண் விருது பெற்ற மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு.. அமெரிக்காவில் நடைபெற்ற பிரம்மாண்ட பாராட்டு விழா!
பத்ம விபூஷண் விருது பெற்ற மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ,அமெரிக்க ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பிரமாண்ட பாராட்டு விழா நடத்தியுள்ளனர் இதுகுறித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகில் ‘மெகாஸ்டார்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் தனது வெற்றி பயணத்தை தொடர்ந்து வரும் ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவி இளம் நடிகர்களுக்கு சவால் விடும் விதமாக இப்போதும் சீரான இடைவெளிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திரையுலகுக்கு அவர் ஆற்றிய கலைச்சேவைக்காகவும் அவர் செய்துள்ள மிகப்பெரிய சாதனைகளுக்காகவும் அவருக்கு நமது நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதற்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவியை கவுரவிக்கும் விதமாக மிக பிரம்மாண்ட விழா ஒன்றை அமெரிக்காவில் உள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ரசிகர்கள் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்விற்கு பீப்புள் மீடியா ஃபேக்டரி சிஇஓ விஸ்வ பிரசாத் பொறுப்பேற்று நடத்தி உள்ளார் .
இதுகுறித்து அவர் கூறும்போது, “’மெகாஸ்டார்’ சிரஞ்சீவி போன்ற மிகப்பெரிய ஜாம்பவானுக்கு இதுபோன்று விழா எடுப்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இந்த விழா திரை உலகில் அவர் செய்த சாதனைகளுக்காக மட்டுமல்ல.. பல தலைமுறை நடிகர்களுக்கு அவர் ஒரு உந்துசக்தியாக இருந்துள்ளார் என்பதற்காகவும் தான்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் டானா பாயிண்ட்டில் உள்ள ரிட்ஸ் கேரிட்டானில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிரஞ்சீவி மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வின் போது பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன
‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவியை கௌரவிக்கும் இந்த முயற்சிக்கு அமெரிக்காவில் உள்ள அவரது ரசிகர்களும் தோள் கொடுத்து உறுதுணையாக நின்றனர். இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தும் விதமாக ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவியின் ரசிகரும் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த தொழிலதிபர் இம்தியாஸ் ஷெரீப் ஒருங்கிணைப்பு பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டார்.
இது குறித்து அவர் கூறும்போது, “லாஸ் ஏஞ்சல்ஸில் ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவிக்கு இப்படி ஒரு விழா எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்காக பெருமைப்படுகிறேன். என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்த விஸ்வ பிரசாத் அவர்களுக்கு நன்றி. இந்த நிகழ்வை மிகப்பெரிய அளவில் வெற்றி ஆக்கியதற்கு தங்களது ஆதரவை கொடுத்த மெகாஸ்டாரின் ரசிகர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றி” என்று கூறியுள்ளார் இம்தியாஸ் ஷெரீப். தற்போது இதுகுறித்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.