பிரிந்துவாழும் கணவர் மூலம் குழந்தை வேண்டும் என நீதிமன்றத்தை நாடிய பெண் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். மும்பையைச் சேர்ந்த 35 வயதான பெண், குடும்பநல நீதிமன்றத்தை வித்தியாசமான கோரிக்கையுடன் நாடியுள்ளார். 2 ஆண்டுகளாக பிரிந்து வாழும் கணவருடன் உடலுறவு மூலமாகவோ அல்லது செயற்கை கருத்தரிப்பு மூலமாகவோ குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

2017-ம் ஆண்டு மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி கணவர் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கு பதிலடியாக தனக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி மனைவியும் மனு தாக்கல் செய்துள்ளார். இரண்டு மனுக்களுமே விசாரணையில் உள்ளது. சட்டப்பூர்வமாக இன்னும் விவகாரத்து கிடைக்கவில்லை என்றாலும் இருவரும் 2 ஆண்டுகளாக பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், பிரிவு காரணமாக குழந்தை அந்தப் பெண்ணிடமே வளர்ந்து வருகிறது.

தற்போது பிரிந்துவாழும் கணவர் மூலமாக மீண்டும் ஒரு குழந்தை வேண்டும் என்று அந்தப்பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார். உடலுறவு மூலமாகவோ அல்லது செயற்கை கருத்தரிப்பு மூலமாகவோ குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மனு மீதான விசாரணையை நடத்திய நீதிபதி, பிரிந்துவாழும் கணவர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தனது மனைவி மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள என்னால், எந்த வகையிலும் உதவ முடியாதுபதில் மனு தாக்கல் செய்திருந்தார். அரிதான வழக்கு என்பதாலும் இது தொடர்பாக சட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லாததாலும், இந்தியாவிலும், வெளிநாடுகளில் இதுபோன்ற வழக்குகளில் என்ன மாதிரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை நீதிபதி கவனத்தில் கொண்டுள்ளார்.

அதன்படி, ஒரு பெண் தனது வாரிசை பெருக்கிக்கொள்ள நினைப்பது அவரது அடிப்படை உரிமை என்று பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். எனினும், பிரிந்து வாழும் மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவோ அல்லது விந்தனு தானம் செய்யவோ நீதிமன்றம் கணவரை கட்டாயப்படுத்த முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இறுதியில் பெண்ணின் கோரிக்கையை ஆதரித்த நீதிமன்றம், செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெறுவது தொடர்பாக கணவர், மனைவி இருவரும் ஜூலை 24-ல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.