கடந்த வியாழக்கிழமை அன்று வெளியான செக்கச் சிவந்த வானம் திரைப்படம் 3 நாளில் தமிழகத்தில் மட்டும் 21 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்துள்ளது. இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குனர் மணிரத்னம். ரத்தின சுருக்க காட்சிகள் மற்றும் வசனங்கள் என தனக்கே உரித்தான பாணியில் தற்போதைய தலைமுறைக்கும் கதை சொல்பவர் மணிரத்னம். இவர் தன்னுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய படம் காற்று வெளியிடை. ஆனால் இந்த படம் சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பை பெறவில்லை. வசூலும் மந்தமாகவே இருந்தது.

 
   
இந்த நிலையில் கேங்ஸ்டர் படம் இயக்க முடிவு செய்த மணிரத்னம்' செக்கச் சிவந்த வானம் என்ற திரைப்படத்தை இயக்கினார். அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி , சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என முக்கிய நட்சத்திரங்கள் பட்டாளத்தை களமிறக்கினார் மணிரத்தினம். இப்படத்தில் சேனாபதி என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அவருக்கு பிறகு அந்த இடத்திற்கு போட்டி போடும் மகன்கள் இடையேயான சண்டையே படத்தின் திரைக்கதை. 

இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியானது. வெளியானது முதல் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. படம் நல்ல விமர்சனம் பெற்றிருப்பதால், படத்தை பார்ப்பதற்கு ரசிகர் கூட்டமும் அலைமோதுகிறது.

இதன் காரணமாக திரையரங்குகளிலும் டிக்கெட் வேகமாக விற்று தீர்ந்து வருகின்றன. இந்த நிலையில் முதல் மூன்று நாட்களில் இந்த படம் தமிழகம் முழுவதும் 21 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. முதல் நாளில் 8 கோடி ரூபாயும் மறுநாள்  6 கோடி ரூபாயும் மூன்றாம் நாளில் 7 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்துள்ளது.