கொரோனா வைரஸ் தனிமைப்படுத்துவதற்கான நோட்டீஸை என் வீட்டில் ஒட்டினால் கவலையில்லை என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் கொரோனா தனிமைப்படுத்தும் நோட்டீஸ் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் ஒட்டப்பட்டது. இதனால், கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற பரபரப்பு ஏற்பட்டது. கமல்ஹாசனும் இதை உடனடியாக மறுத்தார். பின்னர் நடிகை கவுதமி பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை வைத்து கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டதாக மாநகராட்சி விளக்கம் அளித்தது. மேலும் அந்த நோட்டீஸ் அப்புறப்படுத்தப்பட்டது.


இதனையடுத்து நடிகை கவுதமியின் நீலாங்கரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோட்டீசை அதிகாரிகள் ஒட்டினர். மேலும் அங்கு கிருமிநாசினி திரவத்தையும் தெளித்தார்கள். இதுகுறித்து நடிகை கவுதமி கூறுகையில், “நான் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் அமெரிக்கா சென்று திரும்பினேன். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கிடையாது. கொரோனா வைரஸ் சோதனைக்கு என்னை யாரும் உட்படுத்தவும் இல்லை. இப்போது நான் ஈசிஆரில் வசிக்கிறேன். என் வீட்டின் முன்பு எந்த நோட்டீசும் ஒட்டப்படவில்லை. அப்படியே ஒட்டினாலும் கவலையில்லை” என்று தெரிவித்தார்.