நடிகர் தமன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் 'ஒரு நொடி' படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு, இப்படத்தின் இயக்குனருக்கு கார் பரிசளித்துள்ளது.
தயாரிப்பாளரும், திரைப்பட விமர்சகரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் உலகம் முழுவதும் ஏப்ரல் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஒரு நொடி'. தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் மணி வர்மன் என்பவர் இயக்கி இருந்தார்.
விறுவிறுப்பான திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படம், இரண்டு வாரங்களை எட்டியுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடி உள்ளது. இப்படத்தின் இயக்குனர் மணிவர்மனுக்கு தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், மதுரை அழகர் மூவிஸ் அழகர், மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் கே.ஜி.ரத்திஷ் ஆகிய மூன்று பேரும் இணைந்து கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளனர்.

இந்த நிகழ்வின் போது, படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி உள்ள ‘ஒரு நொடி’ படத்தில் எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். ஒளிப்பதிவு இயக்குநராக கே.ஜி.ரத்தீஷ் பொறுப்பேற்க, கலை இயக்குனர் பணியை கவனிக்கிறார் எஸ்.ஜே. ராம். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கமும் படத்தொகுப்பாளர் எஸ் குரு சூர்யாவும் படத்துக்கு தங்கள் பங்களிப்பை பலமாக செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
