பொதுவாக ஜீ.வி.பிரகாஷ் தமிழக நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். பொதுப் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக குரல் கொடுத்து விடுவார். ஜல்லிக்கட்டு, காவிரி மேலாண்மை வாரியம், ஹைட்ரோ கார்பன், தூத்துக்குடி துப்பாக்கி சூடு என அனைத்து பிரச்சனைகளிலும் தனது எதிர்ப்பை மிக ஸ்ட்ராங்காக பதிவு செய்திருந்தார்,

நீட் தேர்வுக்காக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வீட்டுக்கு நேரடியாக சென்று, நிதி உதவி அளித்ததுடன், அணவி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தற்போது தமிழில் கையெழுத்துப் போடுங்கள் என்ற இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

அதே நேரத்தில் வெளியே தெரியாத அளவுக்கு பல நன்மைகளையும் அவர் செய்து வருகிறார்.

இந்நிலையில் விழுப்புரத்தை அடுத்த மரக்காணம் அருகே உள்ள கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆசியர் நியமிக்கப்படவில்லை. அந்த ஆரம்பப் பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்கு பணியாற்றிய ஆசிரியர் வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்டார். ஆனால் புதிய ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.

இது குறித்து கேள்விப்பட்ட  ஜீ.வி.பிரகாஷ், உடனடியாக அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சென்று பார்வையிட்டார். மாணவர்கள் படிப்பதற்கான வசதிகள் இல்லாத அந்தப் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வாங்கித் தந்தார்.

பின்னர் அந்தப் பள்ளிக்கு தன் சொந்த செலவில் ஆசிரியர் ஒருவரை தத்தெடுத்து நியமித்துள்ளார். அவரை மூன்று ஆண்டுகளுக்கு ஜீ.வி.பிரகாஷ் தத்தெடுத்துள்ளார். அவரது மாத சம்பளம், அவருக்கான போக்குவரத்து செலவுகள் முழுவதையும் ஜீ.வி.பிரகாசே ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து தற்போது அந்தப்பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. ஜீ.வி.பிரகாஷின் இந்த சேவையை அந்த கிராம மக்கள் நன்றியுடன் பாராட்டி வருகின்றனர்