சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி கடும் விளைவுகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திவருகிறது. கொரோனா உருவான சீனாவை விட அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.

உலகளவில் கொரோனாவால் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 2,93,539 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. ஸ்பெய்ன் மற்றும் இத்தாலி ஆகிய இரண்டு நாடுகளிலுமே ஒரு லட்சத்து 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளிலும் உயிரிழப்பு 10 ஆயிரத்திற்கும் அதிகம்.

அமெரிக்கா, ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மிக குறைவு. இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 100ஐக்கூட எட்டவில்லை.

இந்நிலையில், மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ள அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளனர்.

அதற்கு, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சொன்ன காரணம் இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு போடப்படும் பிசிஜி என்ற பேசில்லஸ் கால்மெட் - கியூரின்(Bacillus Calmette-Guerin) தான் என்கின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். 

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறந்த இரண்டாவது நாள் இந்த பிசிஜி தடுப்பூசி போடப்படுகிறது. காசநோயை தடுப்பதற்காக இந்த தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பிசிஜி தான் இந்தியர்களை கொரொனாவில் இருந்து காக்கும் கவசமாக ஆகப்போகிறது என்கின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

இந்த பிசிஜி தடுப்பூசி காசநோய்க்கு மட்டுமல்லாமல் சுவாசம் சார்ந்த பல்வேறு நோய்களுக்கும் தடுப்பூசியாய் பயன்படுத்தப்படுகின்றன. காசநோயை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. 

கொரோனாவும் சுவாசம் தொடர்புடைய ஒரு நோய் என்பதால் பிசிஜி தடுப்பூசி போடும் வழக்கமுள்ள இந்தியர்களுக்கு இயற்கையாகவே கொரோனாவை எதிர்க்கும் திறன் அமைந்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்..

உலக நாடுகளில் எந்தெந்த நாடுகளில் இந்த பிசிஜி தடுப்பூசி போடுவதில்லையோ அங்கெல்லாம் இந்த கொரொனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதையும், அதேவேளையில் பிசிஜி தடுப்பூசி போடும் வழக்கமுள்ள நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைவாக உள்ளதையும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் பிசிஜி தடுப்பூசி போடும் வழக்கம் கிடையாது. அதேசமயம் பிசிஜி தடுப்பூசி போடும் வழக்கமுடைய இந்தியாவில் அதன் தாக்கம் குறைவாக உள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிவரும் நிலையில், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற நாடுகள் அளவுக்கு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் இருக்காது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது இந்தியர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் செய்தியாக அமைந்துள்ளது.