வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது.  இதில் நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.

புயல் வருவதற்கு முன்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் வெகுவாக பாராட்டினர். ஆனால் மீட்புப் பணிகள் சிறப்பாக இல்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. குறிப்பாக புயல் வந்து செனறு 4 நாட்கள் ஆகியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு போகவில்லை என அம்மாவட்டங்களில் உள்ள கொந்தளித்துப் போயுள்ளனர்.

நாகை மாவட்டத்தைப் பொறுத்தவரை  வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றியங்கள், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 61 நிவாரண முகாம்களில் 26,956 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை தாமதமாகவும், பற்றாக்குறையாகவும் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இம்முகாம்களில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டாலும், போதிய அளவு மின்விளக்குகள், மின்விசிறிகள் இல்லை என்றும், இதனால், இரவு நேரங்களில் குழந்தைகள் தூங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே, நாகை மாவட்டத்தில் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி அளித்ததாக தகவல் பரவியது.

இந்நிலையில், கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் அருகில் உள்ள கன்னித்தோப்பு என்ற பகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரில் தனது உதவியாளருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு இளைஞர் மூங்கில் கம்பால் அமைச்சரின் கார் கண்ணாடியை உடைத்துள்ளார். மற்றொரு இளைஞர் அமைச்சரை கத்தியால் குத்துவதற்காக பாய்ந்தார். சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக திரும்பிச் சென்றுவிட்டார்.

மேலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மயிலாடுதுறை ஒன்றிய அதிமுக செயலாளர் சந்தோஷ்குமாரின் காரை சிலர் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவங்களை படம் பிடித்த 4 பேரின் செல்போன்களை அவர்கள் பறித்து தரையில் அடித்து உடைத்தனர்.  தற்போது முறையான நிவாரணம் வழங்கவில்லை என மக்கள் கொத்ளித்துக் கிடப்பதால் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட ஒரு சில பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆனால் இது திமுகவின்ர் செய்து வரும் சதி என்று ஆளும் அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.