சுற்றுலா வழிகாட்டிகள் இல்லாததால் அலைக்கழிக்கப்படும் சுற்றுலா  பயணிகள்… - வேலூரில் அவலம்…

சுற்றுலா வழிகாட்டிகள் இல்லாததாலும், தங்கும் விடுதி உட்பட அடிப்படை வசதிகள் இல்லாததாலும் வேலூர் மாவட்டம் வரும் சுற்றுலா பயணிகள் அலைக்கழிக்கப்படும் அவலம் தொடர்ந்து வருவதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன.

உலகம் முழுவதிலுமே சுற்றுலா வேகமாக வளர்ந்து வருகிறது. இன்ப சுற்றுலாவாக மட்டுமல்லாமல், பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசையாகும். இவ்வாறு மேற்கொள்ளப்படும் சுற்றுலாக்கள் மூலமாக அரசுக்கு வருமானம் என்பதோடு மட்டுமல்லாமல், கலாசார பரிமாற்றங்களும் நடக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் பூகோள ரீதியாக எல்லா இடங்களும் 5 வகையான இடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மலையும், மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என்றும், காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை என்றும், வயலும், வயல் சார்ந்த இடங்களும் மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என்றும், வளமின்றி திரிந்த நிலையில் உள்ள இடங்கள் பாலை என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த அனைத்து வகையான இடங்களையும் தன்னகத்தே கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதால்தான் உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் சுற்றுலா செல்ல முடியாத சீசன் என்று எந்த காலமும் இல்லை. எதுவுமே மிதமான பருவ நிலையாகத்தான் இருக்கும். வட இந்தியாவில் பல சுற்றுலா பிரதேசங்களுக்கு சில குறிப்பிட்ட பருவ காலத்தில் செல்ல முடியாது. மழையும் பனிப்பொழிவும் அதிகமாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டில் 90 சதவீதம் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமும் உண்டு.

அதேபோல் மலைவாசஸ்தலம், ஆன்மிக, பொழுதுபோக்கு, வனம்சார்ந்த கடற்கரையோர இடங்கள், கலையம்சங்கள் நிறைந்த வரலாற்று புகழ்வாய்ந்த இடங்கள், வரலாற்று, புராண தொடர்புமிக்க ஆன்மிக தலங்கள், இயற்கை சூழல் சார்ந்த இடங்கள், வேளாண்மை சார்ந்த இடங்கள், ஊரகப்பகுதிகள், சாகசம் புரிவதற்கான இடங்கள் என எதற்கும் தமிழகத்தில் இடமுண்டு. இதுதவிர, மருத்துவம், கல்வி, வர்த்தகம் என்றும் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

இத்தகைய காரணங்களால்தான் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2013–ம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு சுற்றுலாவாக 24 கோடியே 42 லட்சத்து 32 ஆயிரம் பேர் வந்து இருக்கிறார்கள். இது கடந்த ஆண்டு ஏறத்தாழ 34 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுபோல வெளிநாட்டு பயணிகளை ஈர்த்த வகையில் இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. 2013–ம் ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து 39 லட்சத்து 90 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்து இருக்கிறார்கள். இது இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வீதத்தில் 19.11 சதவீதமாகும். அதேபோல் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதிலும் தமிழகம் 21.31 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த இதுவரை சரியாக வெளியே வராத இன்னும் ஏராளமான வாய்ப்புகள், இடங்கள் இருக்கின்றன. சுற்றுலா பயணிகளுக்கு காட்டப்படாத எத்தனையோ இடங்கள் இருக்கின்றன.

அந்த வகையில் தமிழகத்தின் சுற்றுலா வரைபடத்தில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உள்ளடக்கிய வடாற்காடு மாவட்டம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

2 மாவட்டங்களிலும் ஏலகிரி, ஜம்னாமரத்தூர் ஆகிய மலைவாசஸ்தலங்களும், இரண்டு மாவட்ட எல்லையை இணைக்கும் பகுதியான அமிர்தியில் வனச்சரணாலயம், காவலூர் வைனபாப்பு தொலைநோக்கி, ஜலகாம்பாறை, அமிர்தி, பீமன் நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றுடன் வரலாற்று, புராண சிறப்புமிக்க ஆன்மீக தலங்கள், வரலாற்று சின்னங்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.

அதோடு விஐடி பல்கலைக்கழகம், கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி உட்பட சர்வதேச தரம்மிக்க அரசு, தனியார் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவ கல்வி நிறுவனங்கள், சர்வதேச தரம் மிக்க மருத்துவமனை என்றும் மருத்துவம், கல்வி சார்ந்த சுற்றுலாவுக்கான இடமாகவும் வேலூர் மாவட்டம் விளங்குகிறது.

இத்தகைய சூழலில்தான் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உள்ளடக்கிய வடாற்காடு மாவட்டம் வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொதுவாக சுற்றுலா பயணிகள் என்றால் அவர்களுக்கான நியாயமான கட்டண விகிதங்களுடன் கூடிய தங்கும் வசதி, உணவகங்கள், சுற்றுலாத்தலங்களில் கழிவறை, குளியலறை, மருத்துவ வசதி இவற்றுடன் சுற்றுலா தலங்களுக்கு வழிகாட்டி அழைத்து செல்லக் கூடிய சுற்றுலா வழிகாட்டிகளும் நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால், வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒருவர் மட்டுமே சுற்றுலாத்துறையின் மூலம் வழிகாட்டியாக சான்றளிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இதற்கான அறிவிப்பை சுற்றுலாத்துறை வெளியிட்ட போது போதிய விழிப்புணர்வு இல்லாதது, வருவாய் குறைவு, ஆங்கிலம், இந்தி மொழியறிவு இல்லாதது போன்ற பல காரணங்களால் வழிகாட்டிகளாக வருவதற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

கடற்கரை என்றால் மெரினாவையும், மாமல்லபுரத்தை மட்டுமே காட்டுகிறார்கள். கோயில் என்றால் காஞ்சிபுரம், கோடை வாசஸ்தலம் என்றால் ஊட்டி, கொடைக்கானல் என்று குறிப்பிட்ட இடங்களை மட்டுமே முன்னிறுத்தப்படுகின்றன. இதுபோல வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்திலும் அமைதியான மலைப்பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயில்கள், சின்னங்கள், குகை ஓவியங்கள், பண்டைய சின்னங்கள் என்று நிறைந்துள்ளன. எனவே, வழக்கமான இடங்களை மட்டுமே காட்டாமல் வாய்ப்புள்ள அனைத்து வகையான சுற்றுலாக்களையும் இன்னும் விளம்பரப்படுத்த வேண்டும். இப்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தில் இதற்காக இணையதள வசதியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லா ஊர்களிலும் முழுமையான விவரங்களைத்தெரிந்த கைடுகளாக உள்ளூர் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

அனைத்து சுற்றுலா தலங்களிலும் நல்ல இடவசதியும், போக்குவரத்து வசதியும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எப்போதுமே எந்த சுற்றுலா பயணிக்கும் ஆட்டோ டிரைவர், டாக்சி டிரைவர், கைடு, ஓட்டல் பணியாளர்கள்தான் விளம்பர தூதுவர்கள். அவர்களுக்கு நல்ல பயிற்சி அளித்து சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டங்களில் இன்னும் தீவிரமாக எடுத்தால் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்வூட்டும் தமிழ்நாடு என்ற பெயருடன், அவற்றுடன் உள்ளடங்கிய வேலூர், திருவண்ணாமலை மாவட்டமும் பேசப்படும்.

ஏலகிரியில் தங்கும் விடுதி

சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் தொடர்பாக அத்துறை சார்ந்தவர்களிடம் கேட்ட போது, வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் சாலை விரிவாக்கத்துக்காக பல வழிகாட்டி பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும், மாநகராட்சியிடமும் சுற்றுலாத்துறை அணுகியுள்ளது. அதோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புரம் பொற்கோயில், ஜலகண்டேஸ்வரர் கோயில், அமிர்தி, ஏலகிரி, திருப்பாற்கடல், சோளிங்கர், திருவண்ணாமலை, படவேடு என்று முக்கிய இடங்களுக்கு செல்லும் வழிகளை காட்டும் வகையில் டிஜிட்டல் பலகைகள் காட்பாடி ரயில்வே ஸ்டேஷன், வேலூர் பஸ் நிலையம் தொடங்கி ஆங்காங்கே வைக்கப்பட உள்ளது.

ஏலகிரியில் சுற்றுலாத்துறையின் சார்பில் தங்கும் விடுதி கட்டுவதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் இடங்களில் கழிவறை, குளியலறை வசதிகளும் ஏற்படுத்தவும் அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பாக இந்த வசதிகள் வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம் பெறும். வேலூர் கோட்டை அகழி முழுமையாக தூர்வாரப்பட்டு படகுகள் விடப்படும். இதுதவிர தொல்லியல்துறையுடன் இணைந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கல் இருக்கைகள், வழிகாட்டிகள் என அமைக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுலா வழிகாட்டி என்ற கைடுகளுக்காக 6 மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒருவர் மட்டும் சுற்றுலாத்துறையிடம் விண்ணப்பித்து அவருக்கு சென்னை அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பயிற்சி வழங்கப்பட்டு, சான்று வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அரசு கலைக்கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் பேசப்பட்டுள்ளது. விரைவில் நிறையபேர் கைடுகளாக வருவார்கள்’ என்றனர்.