மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி உள்ளிட்ட அனைத்து நிதிகளையும் தர மறுப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி உள்பட அனைத்து நிதிகளையும் வர மறுத்து வருவதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் இன்று குற்றம்சாட்டியுள்ளார். துணை மானியக் கோரிக்கை விவாதத்தின் பதிலுரையில் பேசிய தங்கம் தென்னரசு, ''முதல்வர் ஸ்டாலினின் ஓயாத உழைப்பு, முயற்சியின் காரணமாக 14 வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவிகிதம் என்கிற இரட்டை இலக்கத்தை தொட்டுள்ளது. எதிர்பார்த்ததைக் காட்டிலும், திட்டமிட்டதைக் காட்டிலும், 2.2 சதவிகிதம் அதிகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
கல்வி நிதி தர மறுக்கும் மத்திய அரசு
தமிழகத்தில் கல்வி கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. ஆனால் மத்திய அரசு கல்விக்கான நிதியை வழங்காமல் தொடர்ந்து மறுத்து வருகிறது. மத்திய அரசு ஏறத்தாழ 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை தர மறுத்து, கல்வி உரிமைச் சட்டம், RTE என்று சொல்லக்கூடிய கல்வி உரிமைச் சட்டத்தின்பால், நமக்கு வழங்கக்கூடிய 450 கோடி ரூபாய் நிதியை மட்டுமே தற்போது விடுவித்திருக்கிறார்கள்.
எங்களின் உரிமையை கேட்கிறோம்
விடுவிக்க வேண்டிய பணம் எவ்வளவு? 4 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் கொடுத்திருக்கக்கூடிய பணம் எவ்வளவு? வெறும் 450 கோடி ரூபாய். இந்த நிதியைக்கூட பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வழங்கியிருக்கிறார்கள். கல்வி என்பது நாம் விளையாடக்கூடிய அரசியல் களம் அல்ல; அது அரசியல் இயக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் இருக்கக்கூடிய தார்மீகமான ஒரு பொறுப்பு. மத்திய அரசிடம் நாம் நிதி கேட்பது நீங்கள் இரக்கப்பட்டு தரக்கூடியது அல்ல; இது எங்களுடைய உரிமைகளுக்காக நாங்கள் எழுப்பக்கூடிய குரல்.
தமிழ்நாட்டுக்கு பாரபட்சம்
கல்வி நிதி மட்டுமல்ல; தண்ணீர் கொடுக்கக் கூடிய திட்டமான ஜல்ஜீவன் திட்டத்துக்கான ரூ.3,407 கோடியையும் மத்திய அரசு தரவில்லை. வளர்ச்சி மிகப்பெரிய அளவிலே உருவாகியிருக்கிறது. 2024-2025 ஆம் நிதியாண்டில் மத்திய அரசால் ரூ.50,655 கோடி மதிப்பீட்டில் 8 புதிய தேசிய அதிவேக நெடுஞ்சாலை வழித்தடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் ஒன்று கூட தமிழகத்துக்கு இல்லை'' என்று கூறினார்.
கொடுத்தது ரூ.7.5 லட்சம் கோடி; வந்தது ரூ.2.85 லட்சம் கோடி
தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ''2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்குக் கொடுத்திருக்கக்கூடிய வரிப் பங்களிப்பு 7.5 இலட்சம் கோடி ரூபாய். இந்த 7.5 இலட்சம் கோடி ரூபாய் நாம் கொடுத்துவிட்டு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக 2.85 இலட்சம் கோடி ரூபாய் மட்டுமே நமக்கு நிதிப் பகிர்வாக வந்திருக்கிறது. அதே வேளையில் உத்தரபிரதேசம் ரூ.3.07 லட்சம் கொடுத்துள்ளது. அந்த மாநிலத்துக்கு 3 மடங்கு அதிகமாக ரூ.10.60 லட்சம் கோடியை மத்திய அரசு அள்ளிக் கொடுத்துள்ளது'' என்று தெரிவித்தார்.
