21 நாட்களில் ஊர் பெயரில் சாதிப் பெயர்கள் மாற்றப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஊர்களின் பொது குடியிருப்புகள், சாலைகள், நீர் நிலைகள் மற்றும் பொது கட்டமைப்புகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி விட்டு பூக்களின் பெயர்களையும், திருவள்ளூவர், பாரதியார், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களின் பெயர்களை வைக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. தலைவர்கள் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் அம்பேத்கர், எம்.ஜி.ஆர் ஆகியோர் மற்றும் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் இல்லாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி கேள்வி

மேலும் கோவையில் தமிழகத்தின் நீளமான மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மட்டும் ஏன் சாதி பெயரை நீக்கவில்லை? என பலரும் கேள்வி எழுப்பினார்கள். மேற்கூறிய இரண்டு குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்வைத்து திமுக அரசை விமர்சனம் செய்திருந்தார்.

மக்களிடம் தவறான கருத்து

இந்நிலையில், இதற்கு விளக்கம் கொடுத்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, இதில் எதிர்க்கட்சி வேண்டுமென்றே அரசியல் செய்வதாகவும், ஊர்களில் உள்ள தெருக்களின் சாதி பெயர்கள் 21 நாட்களில் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, ''எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில், மிக முன்னேறிய நோக்கோடு, சமுதாய விழிப்புணர்வோடு, சமுதாயத்தில் இருக்கக்கூடிய இத்தகைய இழிநிலையை துடைத்தெறிய வேண்டும் என்ற அமைக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தத் திட்டங்களுக்கு அவர் வேறு வண்ணம் பூசி தமிழக மக்களிடம் தவறான கருத்துகளை பரப்புகிறார்.

பெயர் வைக்க கட்டுப்பாடுகள் இல்லை

ஏன் இவர்கள் பெயரை எல்லாம் வைக்க கூடாது என்று சில அரசியல் கட்சித் தலைவர்களுடைய பெயரும் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். அரசாணை வெளியிடுகிறபோது, குறிப்பிட்ட பெயர்கள் என்று இந்த பெயர்கள் தான் வைக்க வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடவில்லை.

நாட்டுக்கு உழைத்த உத்தமர்கள், தியாக தலைவர்கள், தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடி தலைவர்கள் பெயரை வைக்கலாம். அந்த பட்டியலில் இருக்கும் பெயர்களை மட்டுமே வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசாணையில் கூறியபடி 21 நாட்களுக்குள் ஊர்களின் சாதி பெயர்கள், தெருக்களின் சாதி பெயர்கள் நீக்கப்படும்'' என்றார்.

ஜிடி நாயுடு பெயர் வைத்தது ஏன்?

மேலும் கோவை மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த தங்கம் தென்னரசு, ''ஜி.டி.நாயுடு பெயரில் நாயுடு என்று இருக்கிறது என்று சொன்னால், அவருக்கு வெறும் ஜிடி பாலம் என்றா அழைக்கமுடியும்? அந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் என்று இன்னார் என்று அறியப்படுகிறார். 

மாபெரும் விஞ்ஞானி

ஜி.டி நாயுடு யார்? ஒரு மிகப் பெரிய விஞ்ஞானி. அந்த பகுதியிலேயே அவர் குடியிருந்தவர். எனவே, அந்தச் சாலைக்கு அவருடைய பெயரை கோவை மாவட்டத்தின் மக்களுக்காக மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களுக்கும் ஒரு மாபெரும் ஒரு விஞ்ஞானியாக விளங்கிய அவர், அவருடைய பெயர் சூட்டுவது என்பது சாலப்பொருத்தமாக இருக்கும் என்ற வகையில் தான் அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது '' என்றார்.