- Home
- Tamil Nadu News
- 'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்காக களமிறங்கிய இபிஎஸ்.. ஆதவ் அர்ஜுனாவை ஆஃப் செய்த அதிரடி பதில்!
'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்காக களமிறங்கிய இபிஎஸ்.. ஆதவ் அர்ஜுனாவை ஆஃப் செய்த அதிரடி பதில்!
அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று இபிஎஸ் கூறியுள்ளார்.

ரஜினியை விமர்சித்த ஆதவ் அர்ஜூனா
தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நடிகர் ரஜினியை விமர்சித்தது தான் இப்போது ஹாட் டாபிக் ஆக உள்ளது. ''எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரவும் சிஸ்டத்தை மாற்றவும் ரஜினிகாந்த் விரும்பினார். ரஜினிகாந்திற்கு அந்த நேரத்தில் திமுக மிரட்டல்களைத் தாங்கும் மனவலிமை இல்லாமல் போனது. இதனால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை'' என்று ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஆதவ் அர்ஜுனா பெயரை குறிப்பிடாமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இது தொடர்பாக இபிஎஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார், அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த் அவர்கள். புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல.
அரசியல் நாகரிகமற்ற செயல்
அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல்'' என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையும் கண்டனம்
மேலும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் வெளியிட்ட கண்டன பதிவில், ''ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.
யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம்.
ரஜினிக்கு மனவலிமை
அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும். தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை.
மாமனாரின் பணத்தை வைத்து...
மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார். அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்'' என்று கூறியுள்ளார்.
