- Home
- Tamil Nadu News
- Thiruparankundram: பொதுமக்களுக்கு அனுமதி இல்லை! திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள்
Thiruparankundram: பொதுமக்களுக்கு அனுமதி இல்லை! திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள்
Thiruparankundram: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் புதிய உத்தரவு
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, வரும் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜனவரி 6, 2026 தீர்ப்பில் இடம்பெற்ற தொடர்புடைய உத்தரவுகள் மற்றும் கண்டறிதல்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
கடந்த 2025ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. பின்னர் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் 2026 ஜனவரி 6ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவை உறுதி செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அங்கு கோயில் நிர்வாகம், தர்கா தரப்பு மற்றும் அரசு சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தீபம் ஏற்ற யாருக்கு அனுமதி?
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கோயில் நிர்வாகம் சார்பில் தேர்வு செய்யப்படும் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் தேவையான அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்றும் இடத்திற்குச் செல்ல முடியும். பொதுமக்களுக்கு அங்கு செல்ல அனுமதி கிடையாது. ஊர்வலம், கூட்டம் கூடுதல், முழக்கங்கள் எழுப்புதல், ஆர்ப்பாட்டம் போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபம் ஏற்றுவதற்கான குழுவின் எண்ணிக்கை மற்றும் அமைப்பை மதுரை மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், தொல்லியல் துறை மற்றும் காவல் ஆணையருடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: மாவட்ட ஆட்சியருக்கு பொறுப்பு
தீபம் ஏற்றுவதற்கான நேரம், செல்லும் வழி, நிகழ்ச்சியின் கால அளவு உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகம் தீர்மானிக்க வேண்டும். தொல்லியல் சின்னங்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் துறை நிபந்தனைகளை வகுக்க வேண்டும். புதிய கட்டுமானம், அகழாய்வு, நிரந்தர அமைப்பு அல்லது கட்டமைப்பு மாற்றங்களுக்கு அனுமதி இல்லை. தர்கா மற்றும் மசூதியின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. விழா முடிந்ததும் அனுமதிக்கப்பட்ட குழுவினர் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும். விழா முடிந்த மூன்று நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நிரந்தர அனுமதியா? உச்ச நீதிமன்றம் விளக்கம்
இந்த ஒருமுறை அனுமதி, தீபத்தூணில் விளக்கேற்றுவது ஏற்கெனவே உள்ள மரபு அல்லது சட்டப்பூர்வ உரிமை என்பதை உறுதிப்படுத்தவில்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனை எதிர்கால ஆண்டுகளிலும் இதேபோல் அனுமதி கோருவதற்கான முன்னுதாரணமாகப் பயன்படுத்த முடியாது. மலைக்கான உரிமை, பயன்பாடு, வழிபாட்டு உரிமை உள்ளிட்ட முக்கியக் கேள்விகள் இறுதி விசாரணையில் முடிவு செய்யப்படும். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2027 ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது. எனவே, நவம்பர் 24ஆம் தேதிக்கான அனுமதி என்பது இந்த ஆண்டுக்கான இடைக்கால ஏற்பாடு மட்டுமே.














