- Home
- Tamil Nadu News
- Voter List Special Camp: முகவரி மாற்றம் டூ பெயர் நீக்கம் வரை... தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!
Voter List Special Camp: முகவரி மாற்றம் டூ பெயர் நீக்கம் வரை... தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றும் (நவ. 21), நாளையும் (நவ. 22) வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாம் நடைபெறுகிறது. புதிய பெயர் சேர்க்க, முகவரி மாற்றம் & திருத்தங்கள் செய்யத் தேவையான முழு விவரங்களை பார்ப்போம்.

இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றும் (நவ.21, சனி), நாளையும் (நவ.22, ஞாயிறு) சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
தமிழகத்தின் தற்போதைய வாக்காளர் நிலவரம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்காகக் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது மொத்தம் 5.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2.82 கோடியும், பெண்கள் 2.95 கோடியு, மூன்றாம் பாலினத்தவர் 7,892 பேரும் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, டிச.11, 2026 வரை பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் நவ.12 முதல் டிச.11 வரை நடைபெறுகின்றன. வாக்காளர்களின் வசதிக்காக, மாவட்டத்தில் உள்ள அனைத்து 1,067 வாக்குச்சாவடி மையங்களிலும் நவம்பர் 21 (சனிக்கிழமை), நவம்பர் 22 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நவம்பர் 29 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இச்சிறப்பு முகாம்களில், வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் வாக்குச்சாவடி மைய அலுவலர்களாகவும் (Designated Location Officers – DLOs), சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் (Booth Level Officers – BLOs) பணியில் இருப்பார்கள்.
யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன சேவைகள்?
2027 ஜன.1, ஏப்.1, ஜூலை 1 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடையும் முதல் முறை வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள தகுதியானவர்கள் தங்களது வீட்டிற்கு அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த முகாம்களில் பொதுமக்கள் கீழ்க்கண்ட பணிகளுக்கான உரிய விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
புதிய பெயர் சேர்த்தல்: படிவம் 6 (Form 6) வாயிலாகப் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
பெயர் நீக்கம்: இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் இடமாற்றம் ஆனவர்களின் பெயர்களை நீக்குதல்.
திருத்தங்கள் & முகவரி மாற்றம்: வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர், முகவரி விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்.
ஆட்சேபனைகள்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக ஆட்சேபனைகள் தெரிவித்தல்.
ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்
நேரடியாக வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.in முகவரி மற்றும் ‘ECINET’ மொபைல் செயலி வாயிலாகவும் வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.














