வண்ணாரப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில், நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதனால், அங்கு நள்ளிரவு வரை பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வடசென்னையில் உள்ள ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து பத்திரப்பதிவு, திருமண பதிவு, வில்லங்க சான்று உள்பட பணிகளுக்காக தினமும் நூற்றுக்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இதுபோன்ற வரும் பொதுமக்களிடம், சார்பதிவாளர் அலுவகத்தில் உள்ள சிலர் லஞ்சம் பெறுவதாகவும், இதற்காக அங்கு இடை தரகர்கள் சிலர் சுற்றி வருவதாகவும், லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், மாறு வேடத்தில் வண்ணாரப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் முகாமிட்டனர். மாலை சுமார் 5.30 மணியளவில், 8 பேர் கொண்ட குழுவாக அவர்கள், உள்ளே நுழைந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களை, வெளியே அனுப்பிவிட்டு, சார்பதிவாளர் அலுவலக கதவை பூட்டினர். பின்னர் ஊழியர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஒவ்வொரு அறையிலும் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

அதில் பல முக்கிய ஆவணங்களும், ஏராளமான பணமும் சிக்கியதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை இரவு வரை தொடர்ந்தது.

சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.