வாலாஜாபாத் ஒன்றியம் கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சிஇந்த ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றன. இந்த அங்கன்வாடி மையத்தில் கீழ் ஒட்டிவாக்கத்தை சார்ந்த குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்த அங்கன்வாடி மையம் மிகவும் பழமையானது புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த நடுநிலைப்பள்ளியின் அருகாமையில் ஒரு புதிய அங்கன்வாடி மையம் ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தில் முன்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் இந்த அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் வகையில் இரண்டு சாய்தள வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையத்தில் முன்பகுதியில் குழந்தைகள் விரும்பி காணும் வகையில் பொம்மைகள் வரையப்பட்டுள்ளன மேலும் தற்போது தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என வலியுறுத்தியும் கார்ட்டூன்கள் வரையப்பட்டுள்ளது.

மேலும் உள்பகுதியில் உயிர் எழுத்துக்களும் ஆங்கில எழுத்துக்களும் எழுதப்பட்டுள்ளது இது அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் எளிதாக மனதில் பதிய வைத்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது தொலைதூரத்தில் இருந்து பார்த்தாலும் மிக பொலிவாக காணப்படும் இந்த அங்கன்வாடி மையத்திற்கு இப்பகுதியில் பெரும் வரவேற்பு உள்ளது.

இதேபோல் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி மையங்களும் வடிவமைத்தால் சிறப்பாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.