குடியாத்தம் அருகே சைக்கிளில் வந்த நகைக்கடை ஊழியரை, காரில் வந்த மர்ம நபர்கள் மோதியும், ஊழியரை சரமாரியாக தாக்கியும் விட்டு ஒன்றரை கிலோ எடையுள்ள புதிய தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டை காந்தி சாலையைச் சேர்ந்த குப்புசாமியின் மகன் சீனிவாசன் (45). இவர், சந்தப்பேட்டை சந்தையில் உள்ள ஒரு நகைக் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

தினமும் சில நகைக் கடைகளில் இருந்து பழைய நகைகளை வாங்கிச் சென்று சென்னையில் உள்ள நகைக் கடைகளில் கொடுத்துவிட்டு, அவர்கள் தரும் புதிய நகைகளை குடியாத்தம் கொண்டு வந்து நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்வது வழக்கம்.

வியாழக்கிழமை காலை குடியாத்தத்தில் உள்ள சில நகைக் கடைகளில் பழைய நகைகளை வாங்கிக் கொண்டு சென்னைக்குச் சென்று நகைக் கடைகளில் கொடுத்தார். அங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள புதிய நகைகளுடன் இரவு 9 மணியளவில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரயிலில் குடியாத்தம் வந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை குடியாத்தம் இரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் பேருந்து நிலையம் வந்தார் சீனிவாசன். அங்குள்ள சைக்கிள் நிலையத்தில் இருந்த தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு நகைப் பையுடன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

நடுப்பேட்டை வணிகர் வீதியில் சென்றபோது பின்னால் வந்த கார் ஒன்று இவரது சைக்கிள் மீது மோதியுள்ளது.

காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சிலர் கீழே விழுந்த சீனிவாசனுக்கு உதவுவதுபோல விரைந்து சென்று, அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர், அவர் வைத்திருந்த நகைப் பையைக் கொள்ளை அடித்துக் கொண்டு வந்த காரிலேறி தப்பித்துச் சென்று விட்டனர்.

இதுதொடர்பாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.