தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வரும் 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்குகிறது. இதற்கேற்ப அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வேலூர், சேலம், கரூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பாளையங்கோட்டை போன்ற நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியுள்ளது.

மேலும் ‘பானி’ புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் ஏமாற்றத்தில் தான் முடிந்தது. மேலும், திசைமாறி சென்ற ‘பானி’ புயல் நிலப்பரப்பில் இருந்து ஈரப்பதத்தை இழுத்து செல்லும் என்பதால், வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. இதனால் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.