மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் களமிறக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடனே மதுரையில் தேர்தல் பணிகளை சு. வெங்கடேசன் தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மதுரை மாவட்டப் பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர். மதுரை மாவட்ட தலைவர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி தலைமையில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் அப்போதும் உடன் இருந்தனர். வரும் தேர்தலில் நடிகர் விஜயின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், மதுரையில் அவருடைய ரசிகர்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார் நடிகர் விஜய். அண்மை காலமாக அதிமுக- பாஜகவினர் நடிகர் விஜயுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் நிலையில், அவரது ரசிகர்கள் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். விஜய் ரசிகர் மன்றத்தின் இந்த நிலைப்பாடு மதுரையில் மட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அண்மையில் மோடிக்கு எதிராக நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.