ரூ.10 கோடிக்கான சொத்தை பிடுங்கிவிட்டு துரத்துகின்றனர்; பெற்ற பிள்ளைகள் மீது முதியவர் பரபரப்பு புகார்
ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகளை முறைகேடாக எழுதி வாங்கிவிட்டு தற்போது என்னை குடியிருக்க விடாமல் கொடுமை படுத்துவதாக முதியவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை சுங்கம் பைபாஸ் பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசைப்பன் (வயது 80). மோட்டார் கம்பனி நடத்தி வந்துள்ளார். இவருக்கு செந்தில்குமார், ரவிக்குமார் ஆகிய இரண்டு மகன்களும், மகேஸ்வரி, சூர்யா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தனக்கு சொந்தமான சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை மகன்கள் மோசடி செய்து எழுதி வாங்கிவிட்டு விரட்டியடிததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
சாரங்கா கோஷம் விண்ணை பிளக்க 3 மணி நேரம் போராடி தேரை மீட்ட பக்தர்கள்; கும்பகோணத்தில் பரபரப்பு சம்பவம்
இது தொடர்பாக அவர் கூறுகையில், பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் மனு அளிக்க அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது குழந்தைகள் தனக்கு சொந்தமான சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 40 செண்ட் நிலத்தை எழுதி வாங்கியதாகவும், அதில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி தருவதாக கூறி மோசடியாக எழுதி வாங்கினார்கள். இது தொடர்பாக வழக்கு நடந்து வரும் நிலையில், மகன்கள் தன்னை தாக்கி வெளியேறுமாறு மிரட்டியதாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் மீண்டும் தனது மகன்கள் தன்னை தாக்கி தற்போது குடியிருக்கும் வீட்டை இடிக்க வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது சொத்தை மீட்டுத்தர வேண்டும் எனத் தெரிவித்தார்.