கோவையில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதி
கோவையில் நகரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்த நிலையில் பந்தய சாலை, ஆர் எஸ் புரம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. முக்கிய மேம்பாலங்கள் அடியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணிக்கு மேல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. காந்திபுரம், சிங்காநல்லூர், ராமநாதபுரம், உக்கடம், போத்தனூர், பந்தய சாலை, காட்டூர் டவுன் ஹால் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் மழை வெளுத்து வாங்கியது.
ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்த போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளாகினர். அதுமட்டுமின்றி பந்தய சாலை, ஆர் எஸ் புறம் உள்ளிட்ட பகுதிகளில் சில மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பந்தயசாலைப் பகுதியில் மரம் விழுந்ததில் கார் ஒன்று பலத்த சேதம் அடைந்தது. அதேபோல் அவிநாசி மேம்பாலம், கிக்கானி மேம்பாலம், லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து அவ்விடங்களில் ஸ்தம்பித்தது. அவிநாசி மேம்பாலம் உள்ளிட்ட சில பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன. இதனால் இரவு பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர். மேம்பாலங்கள் அடியில் தேங்கிய நீரை மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் கொண்டு அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
உருவானது மொக்கா புயல்! 14ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்