உருவானது மோக்கா புயல்! 14ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருமாறியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
2023ஆம் ஆண்டில் உருவாகி இருக்கும் முதல் புயலான மோக்கா புயலை மேற்கு வங்கமும் ஒடிசாவும் எதிர்கொள்ள உள்ளன. இதனால் வரவிருக்கும் நாட்களில் இவ்விரு மாநிலங்களிலும் கனமழை பெய்யும் என்றும் அதிவேக காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில், இன்று அது மேலும் வலுப்பெற்று மோக்கா புயலாக மாறியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் மத்திய வங்காள விரிகுடாவில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வங்காளதேசம் - மியான்மர் கடற்கரையை நோக்கி நகரும் என்றும் மே 13 முதல் வலு குறைந்து, மே 14ஆம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மார் பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மோக்கா புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 130 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும். இந்தப் புயலால் தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. ஆனால், தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 14ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிவேகக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென்கிழக்கு வங்கக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.