கோவையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ தனது 4 வயது குழந்தையை தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை அழைத்து வர வேண்டாம் என்று கள்ளக்காதலன் கூறியதால் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கோவை மாவட்டம் சிங்காநல்லூரை அடுத்த இருகூர் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி(35). இவருடைய மனைவி தமிழரசி(30). இந்த தம்பதிக்கு 4 வயதில் அபர்ணாஸ்ரீ என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தைகளுடன் தமிழரசி தனியாக வசித்து வந்தார். குடும்ப வருமானத்திற்காக தமிழரசி கட்டிட வேலைக்கு சித்தலாக சென்று வந்துள்ளார். அப்போது வசந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தாயிடம் போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை

இந்நிலையில் நேற்று பிற்பகல் அபர்ணாஸ்ரீக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனிடையே குழந்தைகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தமிழரசியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தை கொலை

இதனையடுத்து தமிழரசியை கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் பாணியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தமிழ்ச்செல்வி தனது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்: தமிழிரசி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார். ஆனால் அந்த வாலிபர் தாராளமாக நாம் சேர்ந்து வாழலாம். ஆனால் உனது குழந்தையை அழைத்து வரக்கூடாது. குழந்தை இல்லாமல் நீ மட்டும் தனியாக வந்தால் சேர்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

நாடகமாடிய தாய்

எனவே அவர் தனது குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று குழந்தை விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்த போது கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். இதில் குழந்தை உயிரிழந்தது. உடனே தமிழிரசி குழந்தை மயங்கி விட்டதாக நாடகமாடியுள்ளார். இந்த கொலையில் அவருடைய கள்ளக்காதலனுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் ஒரு அபிராமியா என குழந்தையைக் கொன்ற தாய் என செய்தி பரவி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.