- Home
- Tamil Nadu News
- கோவையில் சினிமா மிஞ்சிய விபத்து! அப்பளம் போல் நொறுங்கிய ஆம்னி பேருந்து! அலறிய பயணிகளின் நிலை என்ன?
கோவையில் சினிமா மிஞ்சிய விபத்து! அப்பளம் போல் நொறுங்கிய ஆம்னி பேருந்து! அலறிய பயணிகளின் நிலை என்ன?
கோவை அவிநாசி சாலையில் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதில் ஒருவர் பலியாகி 6 பேர் காயமடைந்தனர். ஓட்டுநர் பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூருக்கு பயணிகளை எற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இரண்டு கார்கள், ஒரு லாரி மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து ஆம்னி பேருந்து மோதியது.
இதில் சுந்தர்ராஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வாகனங்களில் வந்த 6 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர். பேருந்து மோதியதில் கார்கள் பலத்த சேதம் அடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் கார்களில் சிக்கி இருந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடைய இந்த விபத்து சம்பவம் குறித்து பிளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பேருந்து ஓட்டுனர் பயணி ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்து காரணமாக அவிநாசி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கிய ஆம்னி பேருந்தின் முன்பகுதி அப்பளம் நொறுங்கியது.