கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணியினர் தீப்பந்தம் கையில் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குற்றம்சாட்டினார்கள்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலையை பெரிதும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கோவை விமான நிலையம் பின்புறம் பிருந்தாவன் நகர் பகுதியில் ஆண் நண்பரை தாக்கி விட்டு தனியார் கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று 3 கொடூரர்கள் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை
மயக்க நிலையில் கிடந்த மாணவி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். சென்னைக்கு அடுத்த பெரிய நகரமான கோவையில் நடந்துள்ள இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? என கேள்வி எழுப்பி இருப்பதாக அதிமுக, பாஜக, தவெக, பாமக உள்ளிட்ட கட்சிகல் தெரிவித்துள்ளன.
தமிழக பாஜக கடும் கண்டனம்
தமிழக பாஜகவும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. ''கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே நமது பொழுது விடிகிறது, எந்த ஊரில் எந்தப் பெண்ணின் வாழ்வு சூறையாடப்பட்டதோ என்ற பயத்துடனேயே செய்தித்தாள்களை நாம் புரட்ட வேண்டியிருக்கிறது.
கம்பு சுற்றும் ஸ்டாலின்
வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் போனாலும் சரி பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள், “தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்” என வெட்டி வசனம் பேசும் திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர், இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் ஸ்டாலின் கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா?'' என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து இருந்தார்.
தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்
இந்நிலையில், மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து கோவையில் இன்று பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தலைமையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக மகளிரணி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீப்பந்தத்தையும், பெப்பர் ஸ்பிரேவையும் கையில் ஏந்தி தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், 'கோவை சம்பவம் தமிழக அரசுக்கு அவமானம். மாணவியை சீரழித்த கயவர்களை கைது செய்ய வேண்டும். பெண்கள் பாதுகாப்பில் அக்கறை இல்லாத தமிழ அரசு. பெண்கள் வயிறு பற்றி எரிகிறது' என கோஷங்களை எழுப்பினார்கள். கோவை சம்பவம் நடந்து பல மணி நேரமாகியும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
