கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையம் பின்புறம் பிருந்தாவன் நகர் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கார் கண்ணாடியை உடைத்து மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த ஆண் நண்பரை அடித்து கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை
இதில் சுயநினைவை இழந்த அந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட கயவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த 500 மீட்டர் சுற்றளவில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் நீடித்து வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம்
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், கோவை சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நெஞ்சம் பதறுகிறது
இந்த நிலையில், கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா?
முதல்வர் துயில் களைவது எப்போது?
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது? கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
