கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அனைத்து தலைவர்களையும் தலைகுனிய வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையம் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றத்தில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என்று விளம்பரத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அரசு இன்று தமிழகத்தை தலைகுனிய வைத்திருக்கிறது.. ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய சம்பவம் கோவையில் விமான நிலையம் பின்புறம் கொடூரமாக நடந்தேறி இருக்கிறது.
ஒரு மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம் மனதை நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது.. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது மறுபடியும் மனக்கலக்கத்தோடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது... கல்லூரி வளாகங்கள் தொடங்கி சாலைகள் வரை பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பெண்கள் வாழுகின்ற சூழ்நிலை மிக மிக அதிர்ச்சி அளிக்கிறது... தலைகுனிய விடமாட்டோம் தலைகுனிய விடமாட்டோம் என்று சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் பெண்கள் வெளியிலேயே தலை காட்ட முடியாத ஒரு இருண்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது மிக மிக வேதனை ....
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்... தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.. தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பின்மை பற்றியும் அதனால் அவர்கள் பாதிக்கப்படுவதை பற்றியும் அடிக்கடி பதிவிடும் நிலைமை வருவதை நினைத்து வேதனை அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


