NDA கூட்டணியில் விஜய் வேண்டாம்.. முட்டுக்கட்டை போடும் இபிஎஸ்?.. பின்னணி என்ன?
''விஜய் என்டிஏ கூட்டணியில் சேர்ந்தால் தான் அவருக்கும் லாபம், என்டிஏவுக்கும் லாபம்'' என ஒரு சில அரசியல் நிபுணர்கள் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

சூபிடிக்கும் தமிழக அரசியல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியும், அதிமுக, பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணியும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கருதப்படும் நடிகர் விஜய்யின் தவெகவும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தங்களுடன் கூட்டணியில் சேர்ந்தால் ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என தவெக கூவி கூவி அழைத்தும் எந்த ஒரு கட்சியும் இதுவரை கூட்டணி சேரவில்லை.
NDA கூட்டணியில் விஜய்?
இதற்கிடையே அனைவரும் எதிர்பாராதவிதமாக விஜய், என்டிஏ கூட்டணியில் இணைய போவதாகவும், அவருக்கு துணை முதல்வர் பதவியும், எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவியும் வழங்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல்கள் கூறின. ''விஜய் என்டிஏ கூட்டணியில் சேர்ந்தால் தான் அவருக்கும் லாபம், என்டிஏவுக்கும் லாபம்'' என ஒரு சில அரசியல் நிபுணர்கள் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். 'விஜய் தனித்து போட்டியிட்டால் தான் தவெக வாக்கு வங்கி அறிய முடியும். அது போக பாஜகவுடன் சேர்ந்தால் கட்சியை அழித்து விடுவார்கள்' என்ற எச்சரிக்கையும் அவருக்கு விடுக்கப்பட்டு வருகிறது.
விஜய்க்கு முட்டுக்கட்டை போடும் இபிஎஸ்
இது ஒருபக்கம் இருக்க, விஜய் என்டிஏ கூட்டணியில் சேர அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியே விரும்பவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவின் மூத்த தலைவர்கள் விஜய் என்டிஏவில் இணைவார் என சூசகமாக தெரிவித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியோ, 'கூட்டணி தொடர்பாக தவெகவுடன் அதிமுகவோ, கூட்டணி கட்சியோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை' என இருமுறை விளக்கம் அளித்துள்ளார்.
விஜய்க்கு முதல்வர் பதவி
இபிஎஸ்ஸின் இந்த பேச்சு, விஜய் என்டிஏ கூட்டணி பக்கம் வரவேண்டாம் என்ற நிலையையே பறைசாற்றுவதாக உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது என்டிஏ கூட்டணியில் விஜய் இணைந்தால் முதல்வர் பதவி கூட அவருக்கு கொடுக்கப்படலாம் என தகவல்கள் கசிகின்றன. பல தசாப்தங்களாகத் தமிழகத்தின் பிரதான கட்சியாக இருக்கும் அதிமுக, நேற்று முளைத்த ஒரு கட்சிக்கு அதிகாரம் கொடுப்பதை விரும்பவில்லை.
இபிஎஸ்ஸின் பயம்
பாஜக மேலிடம் விஜய்யை ஒரு முக்கிய சக்தியாக பார்க்கிறது. ஒருவேளை விஜய் என்டிஏ கூட்டணிக்கு வந்து தேர்தலுக்கு பிறகு தவெக அதிமுகவுக்கு டப் கொடுக்கும் வகையில் மாபெரும் வெற்றி பெற்று விட்டால், அதிக வாக்குகளை அறுவடை செய்து விட்டால் நமக்கு பின்னால் ஆட்சி அமைக்க ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என இபிஎஸ் பயப்படுகிறார் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இபிஎஸ்ஸின் பிம்பம் சுருங்கி விடுமா?
இது தவிர, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய வாழ்வா? சாவா? கட்டத்தில் இபிஎஸ் இருக்கிறார். விஜய் போன்ற ஒரு "மாஸ்" பிம்பம் உள்ளே வரும்போது, அது இபிஎஸ்ஸின் பிம்பத்தைச் சுருக்கிவிடுமோ என்ற கவலையும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படியோ விஜய் என்டிஏ கூட்டணிக்கு போவாரா? இல்லையா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

