SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் SIR-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் நாளை முதல் தொடங்க உள்ளது. SIR என்னும் பெயரில் பாஜக அரசு மக்களின் வாக்குரிமையை தடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து SIRக்கு எதிராக திமுக தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடந்தது.
SIR-க்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய முஸ்லீல் யூனியன் லீக், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல்
மக்களின் வாக்குரிமையை பறிக்கும் SIR ஐ நிறுத்தா விட்டால் அனைத்து கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுத்தபடி SIR-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
லட்சக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும்
அந்த மனுவில், ''பருவமழை மற்றும் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை வருவதால் இந்த நேரத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்வது உகந்த காலம் அல்ல. இதுமட்டுமின்றி தமிழகத்தில் SIR ஐ செயல்படுத்தினால் லட்சக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும். அரசியலைப்பு சட்டத்தை மீறி அதிகாரங்களை மீறி SIR ஐ தேர்தல் ஆணையம் செயல்படுத்த துடிக்கிறது'' என்று கூறப்பட்டுள்ளது.
