தமிழகத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் விஜய்யின் தவெக பங்கேற்கவில்லை. வேறு எந்த கட்சிகள் பங்கேற்கவில்லை? என்பது குறித்து பார்ப்போம். 

இந்தியாவில் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்த நிலையில், 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதால் பாஜகவுக்கு பாதகமான வாக்காளர்கள் நீக்கப்படுவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கக்ட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

SIR அனைத்துக் கட்சி கூட்டம்

SIR என்னும் பெயரில் பாஜக அரசு மக்களின் வாக்குரிமையை தடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. SIR-க்கு எதிராக முழு வீச்சில் களமிறங்கிய திமுக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. SIR-க்கு ஆதரவாக இருப்பதால் அதிமுக, பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதே வேளையில் திமுகவை தொடர்ந்து எதிர்த்து வரும் தவெகவுக்கும் மற்றும் ராமதாஸ் தரப்பு பாமவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்

இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதேபோல் பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிகவும் பங்கேற்றுள்ளது.

தவெக, நாதக புறக்கணிப்பு

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மொத்தம் 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், 21 கட்சிகள் பங்கேற்கவில்லை. நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தை தொடங்கி வைத்த முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், SIRஐ எதிர்ப்பதற்கான காரணத்தை விளக்கினார். SIR தொடர்பாக கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் கருத்து தெரிவிக்க உள்ளனர். கூட்டத்தின் முடிவில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.