சென்னை வளசரவாக்கம் அருகே இருக்கிறது கைக்கான் குப்பம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் மோகனா. இவரது மகன் சீனிவாசன்(17). கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து மகனுடன் மோகனா தனியாக வசித்து வருகிறார். சினிமா படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் சமையல் பாத்திரம் சுத்தம் செய்யும் தொழில் பார்த்து வருகிறார். சீனிவாசன் குன்றத்தூரில் இருக்கும் ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

விடுதியில் தங்கி படித்த சீனிவாசன் விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். தற்போது பொங்கல் விடுமுறை விடப்பட்டிருந்ததால் சீனிவாசன் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் சலூன் கடைக்கு முடிவெட்ட சென்றவர் ஸ்டைலாக வெட்டிவிட்டு வந்துள்ளார். அதைக்கண்டு மோகனா, 'படிக்கிற வயதில் இப்படியா வெட்டுவது?' என மகனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்.

அதன்படி மோகனா வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து அவரது சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்த மோகனா, மகன் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு மோகனாவிடம் விசாரணை நடந்து வருகிறது.

Also Read: அதிகாலையில் கோர விபத்து..! கார்-அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதிய ஆம்னி பஸ்..! 4 பேர் உடல் நசுங்கி பலி..!