யோ யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றால் இந்திய அணியில் ஆடலாம்; இல்லையென்றால் நடையை கட்டலாம் என அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் உடற்தகுதிக்கு அண்மைக்காலமாக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிப்பதற்காக யோ யோ டெஸ்ட் நடத்தப்படுகிறது. அனுபவ வீரர்கள், சீனியர் வீரர்கள், கேப்டன் என எந்த பாரபட்சமும் இல்லாமல் இந்த டெஸ்ட் அனைத்து வீரர்களுக்கும் மேற்கொள்ளப்படுகிறது. 

யோ யோ டெஸ்டில் தேர்வாகாத வீரர்கள், அணியில் இடம்பிடிக்க முடியாது. யோ யோ டெஸ்டில் தேர்வாகததால் இங்கிலாந்தில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் ஆடும் வாய்ப்பை சஞ்சு சாம்சனும், ஆஃப்கானிஸ்தானுடனான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை முகமது ஷமியும் தவறவிட்டனர். 

ஐபிஎல்லிலும் உள்நாட்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி, 2 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பிடித்த ராயுடு, யோ யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில், யோ யோ டெஸ்ட் தொடர்பான சர்ச்சை வலுத்துள்ளது. உடற்தகுதி முக்கியம்தான். ஆனால் இந்த ஒரே ஒரு டெஸ்டின் மூலம் உடற்தகுதி இல்லை என்று வீரர்களை ஒதுக்குவது சரியல்ல என்ற குரல் வலுத்துள்ளது. 

யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாத வீரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், யோ யோ டெஸ்டின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும், அதையும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் போன்ற ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

யோ யோ டெஸ்ட் தொடர்பான விவாதங்கள் வலுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் யோ யோ டெஸ்டை அனைத்து வீரர்களும் எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொடருக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி அடைந்தால் அணியில் ஆடலாம். இல்லையென்றால் நடையை கட்டலாம். யோ யோ டெஸ்ட்டிற்கு வீரர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.